

கள்ளக்குறிச்சி: சங்கராபுரத்தில் அரசு வழங்கிய வீட்டு மனைப் பட்டாக்களை வேறு சிலருக்கு பட்டா மாற்றம் செய்துள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த பட்டியலினத்தவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேரூராட்சிக்குட்பட்ட காட்டுவன்னஞ்சூர் பகுதியில் வசிக்கும் 70 பட்டியலின குடும்பங்களுக்கு, கடந்த 1999-ம்ஆண்டு அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், தலா 3 சென்ட் வீட்டு மனைகளை வழங்கியுள்ளார். சுமார் 23 ஆண்டுகள் கடந்த நிலையில், தமிழக அரசு வீட்டு மனை பட்டா கொடுத்தும், நிலத்தை அளந்து ஒதுக்கீடு செய்யாமல் வருவாய்த்துறை அதிகாரிகள் அப்பகுதி மக்களை அலைக்கழித்து வருகின்றனர். இதனால் அவர்கள் அவ்விடத்தில் கொட்டகை மட்டும் போட்டு வசித்து வந்தனர். தற்போது அரசு வழங்கிய அந்த இடத்தை போலி ஆவணம் மூலம் சிலருக்கு பட்டா மாற்றம் செய்து கொடுத்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இப்பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . பல ஆண்டுகளாக வீடின்றி தவித்து வரும் எங்களுக்கு முறையாக இடத்தை அளவீடு செய்து தர வேண்டும் எனவும் அப்பகுதியைச் சேர்ந்த பட்டியலினத்தவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து விளக்கம் பெற சங்கராபுரம் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் நடராஜனை தொடர்பு கொண்டபோது, அவர் பேச முன்வரவில்லை.
தமிழக அரசு வீட்டு மனை பட்டா கொடுத்தும், நிலத்தை அளந்து ஒதுக்கீடு செய்யாமல் வருவாய்த்துறை அதிகாரிகள் அப்பகுதி மக்களை அலைக்கழித்து வருகின்றனர்.