

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா சுவாமி தரிசனம் செய்தார்.
ஆந்திர மாநிலத்தில் 2019-ம் ஆண்டு நடைபெற்ற ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. ஆளும் கட்சியின் சார்பில் வெற்றி பெற்றநடிகை ரோஜா ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவையில் பதவியேற்ற பிறகு நடிகை ரோஜா காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அமைச்சர் ரோஜாவுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆந்திர மாநில அமைச்சரவையில் இடம் கிடைத்தற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தாய் வீடான ஆந்திரத்தில் எனக்குஅமைச்சரவையில் இடம் கிடைக்க மக்கள் பலர் பிரார்த்தனை செய்தனர். தமிழகம் எனக்கு புகுந்த வீடு. எனக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க வேண்டும் என்று இங்கேயும் எதிர்பார்த்தனர். முதல் படம் நடித்தது முதல் தற்போது வரைஆண்டுதோறும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை தரிசனம் செய்வேன். என்னுடைய வேண்டுதலை அம்பாள் நிறைவேற்றியுள்ளார். எந்தக் காரியம் செய்தாலும் காமாட்சி அம்மனை வணங்கிய பின்தான் தொடங்குவேன் என்றார்.