அதிருப்தி நிர்வாகிகளிடம் போனில் பேச்சு: மனதை மாற்றிய விஜயகாந்தின் சமரசம்- போட்டி பொதுக்குழு கூட்ட முடியாமல் சந்திரகுமார் ஏமாற்றம்

அதிருப்தி நிர்வாகிகளிடம் போனில் பேச்சு: மனதை மாற்றிய விஜயகாந்தின் சமரசம்-  போட்டி பொதுக்குழு கூட்ட முடியாமல் சந்திரகுமார் ஏமாற்றம்
Updated on
1 min read

அதிருப்தியிலிருந்த மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்களை விஜயகாந்த் போனில் தொடர்பு கொண்டு பேசியதையடுத்து அவர்கள் மனம் மாறினர். இதனால், போட்டி பொதுக்குழுவை நடத்த முடியாத சூழலில் சந்திரகுமார் அணி உள்ளது.

மக்கள் நலக் கூட்டணியிலிருந்து தேமுதிக விலக வேண்டும் என்று தேமுதிகவின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த வி.சி.சந்திரகுமார் உட்பட 3 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 4 மாவட்ட செயலாளர்கள் திடீரென போர்க்கொடி தூக்கினர். இதனால் அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். தங்களை கட்சியை விட்டு நீக்கியது செல்லாது என்று சந்திரகுமார் தரப்பு கூறி வருகிறது. தேமுதிகவில் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை ஒன்று திரட்டி தனது அடுத்த முடிவை அறிவிக்கவுள்ளதாக சந்திரகுமார் கூறினார். இதற்கான முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டார்.

எனவே, அதிருப்தி நிர்வாகிகளை கூட்டி போட்டி பொதுக்குழுவை சந்திரகுமார் அணி நடத்தவுள்ளதாகவும், தாங்கள் தான் தேமுதிக என்றும், விஜயகாந்துக்காக தலைமை பதவியை விட்டு வைக்க திட்டமிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனை அறிந்த விஜயகாந்த், கடந்த 6-ம் தேதியன்று தேமுதிகவின் 57 மாவட்ட செயலாளர்களையும், பொதுக்குழு உறுப்பினர்களையும் போனில் தொடர்பு கொண்டு பேசினார். இதன்பேரில், அதிருப்தியில் இருந்த நிர்வாகிகள் பலர் தாங்கள் தேமுதிகவிலேயே இருப்போம் என்று உறுதியளித்ததாக கூறப்படுகிறது. இதனால் போட்டி பொதுக்குழுவை நடத்த முடியாத நிலை சந்திரகுமாருக்கு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேமுதிகவின் மாவட்ட செயலாளர் ஒருவர் கூறும்போது, “தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில தினங்களுக்கு முன்பு அனைத்து மாவட்ட செய லாளர்களையும் போனில் தொடர்பு கொண்டு பேசினார். ரசிகர் மன்றத்தில் இருந்த உங்களை இன்றைக்கு மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏ. ஆக்கியுள்ளேன். உங்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வது எப்படி என்று எனக்கு தெரியும். அதிமுக ஆசை வார்த்தைக் கூறியதால் அவர்கள் பின்னால் சென்ற 9 பேரில் 7 பேர் நிலை என்னவானது என்பதை நன்றாக அறிவீர்கள். ஆகவே, யார் பின்னாலும் சென்று ஏமாற வேண்டாம் என்றார். விஜயகாந்தின் இந்த பேச்சு நிர்வாகிகள் பலரை மனமாற வைத்துள்ளது. இதனால், சந்திரகுமார் தரப்புடன் தொடர்பில் இருந்த பலர் தற்போது அவருடன் பேசுவதை நிறுத்திக் கொண்டுவிட்டனர். இதனால் போட்டி பொதுக்குழு திட்டத்தை சந்திர குமார் கைவிட்டுள்ளார்” என்றார்.

10-ம் தேதி கூட்டம்

இதுபற்றி சந்திரகுமாரிடமே கேட்ட போது, “ பொதுக்குழுவை கூட்டுகிற எண்ணம் எதுவும் எனக்கு இல்லை. அதிருப்தி நிர்வாகிகளை வரும் 10-ம் தேதி கூட்டி ஆலோசித்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையை அறிவிப் பேன்” என்றார். இதன்படி சென்னை தி.நகரில் இக்கூட்டம் நடக்கிறது.

சந்திரகுமார் தரப்புடன் தொடர்பில் இருந்த பலர் தற்போது அவருடன் பேசுவதை நிறுத்திக் கொண்டுவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in