

கிருஷ்ணகிரி: வருவாய் கிடைக்காவிட்டாலும், செலவு தொகையாவது கிடைக்கும் என்பதால் ஊறுகாய், வத்தல் தயாரிக்க மாங்காய்களை அறுவடை செய்யும் பணியில் கிருஷ்ணகிரி விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மா உற்பத்தில் முதலிடம் வகிக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். நிகழாண்டில் மா பூக்கள் மற்றும் காய்களில் பூச்சி தாக்குதல் காரணமாக 75 சதவீதம் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கும் விவசாயிகள்.
தற்போது மரங்களில் உள்ள காய்களை ஊறுகாய், வத்தல் தயாரிக்க அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மாங்கூழ் தொழிற்சாலை
இதுதொடர்பாக வீரமலை பகுதியைச் சேர்ந்த குமார் மற்றும் சிலர் கூறும்போது, மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும், இயற்கை இடர்பாடுகள் மற்றும் பூச்சி தாக்குதல் காரணமாக மா சாகுபடி பாதிக்கப்பட்டு வருகிறது. நிகழாண்டிலும் பூக்களை தாக்க தொடங்கிய பூச்சிகள், மாங்காய்களையும் தாக்கி உள்ளன. இதனைத் தவிர காற்றுடன் பெய்யும் மழையால், மாங்காய்கள் மரங்களில் இருந்து உதிர்ந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல் சாகுபடி குறைவால், மாங்கூழ் தொழிற்சாலைகள் செயல்படுமா என்ற அச்சமும் விவ சாயிகளிடையே உள்ளது. அவ்வாறு மாங்கூழ் தொழிற்சாலைகள் திறக்கப்பட்டாலும், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து மாங்காய்கள் அறுவடைக்கு கொண்டு வருவார்கள். அப்போது உள்ளூர் மாங்காய்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே தான் தற்போதே விவசாயிகள் பலர் மாங்காய்கள் அறுவடை செய்து ஊறுகாய், வத்தல் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். செந்தூரா, பெங்களூரா ரக மாங்காய்கள் தற்போது கிலோ ரூ.20-க்கு கொள்முதல் செய்கின்றனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.40-க்கு கொள்முதல் செய்தனர். இதன் மூலம் வருவாய் கிடைக்காவிட்டாலும், செலவு தொகையாவது கிடைக்கும். மாவிவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை தமிழக அரசு எடுக்க வேண்டும், என்றனர்.
அரசின் கவனத்திற்கு
இதுதொடர்பாக பர்கூர் திமுக எம்எல்ஏ மதியழகன் கூறும்போது, மாமரங்களில் மா பழ ஈ எனும் ஏகாடியா பூச்சி இனங்கள் மாவினை தாக்கி மகசூலை தடுக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த இயற்கை முறையில் பொறி வைத்து ஈக்களை அளிக்க ஏக்கருக்கு 5 எண்கள் வீதம் 5 லட்சம் பொறிகள் இலவசமாக வழங்க வேண்டுமென முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். மா விவசாயிகளின் கோரிக்கை குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும், என்றார்.