Published : 13 Apr 2022 06:57 AM
Last Updated : 13 Apr 2022 06:57 AM
திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 650 கிராம் எடையில் 7 மாதத்தில் பிறந்த பெண்குழந்தைக்கு இரண்டரை மாதங்கள் சிகிச்சை அளித்து காப்பாற்றிய மருத்துவர்கள் குழுவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருப்பூர் - தாராபுரம் சாலையிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரசவத்துக்காக ஏராளமானோர் தினமும்வருவது வழக்கம். திருப்பூர் -மங்கலம் சாலை செட்டிபாளையத்தை சேர்ந்த தம்பதி குமார் (30), சத்யா (27). கடந்த 2 முறை சத்யா கர்ப்பமடைந்த நிலையில் கருக்கலைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, 3-வது முறையாக கர்ப்பம் தரித்த அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தது.
7 மாதங்களான நிலையில், கடந்தஜனவரி 29-ம் தேதி திருப்பூர்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உடனடியாக அவருக்கு பிரசவம் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதில், 650 கிராம் எடையில் பெண் குழந்தை பிறந்தது.
பிறக்கும் குழந்தைகள் குறைந்தபட்சம் 2 முதல் 2.5 கிலோ வரை எடை இருக்க வேண்டும். ஆனால், சத்யாவுக்கு எடை மிகவும் குறைவாக பிறந்ததால், பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தையை சேர்த்து மருத்துவர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
மேலும், நுரையீரல் வளர்ச்சி பெற சர்பாக்சண்ட் மருந்து, செயற்கை சுவாச வசதி மற்றும் தாய்ப்பால் வங்கி மூலமாக தாய்ப்பால் உள்ளிட்டவற்றை அளித்து கண்காணித்தனர்.
இரண்டரை மாதங்களுக்கு பிறகு, அந்த பெண் குழந்தை 1 கிலோ 300 கிராம் எடை வந்துள்ளது. தாய்ப்பால் குடிக்கும் அளவுக்கு குழந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து, குழந்தைக்கு வழங்கப்பட்ட செயற்கை சுவாசக் கருவியும் நீக்கப்பட்டுள்ளது. நுரையீரலும் வளர்ச்சி பெற்றுள்ளது. சத்யா தனது குழந்தையுடன் மருத்துவமனையில் இருந்து நேற்று வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
எடை குறைவாக பிறந்த குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள் செந்தில்குமார், பிரியா விஸ்வாசம், தனசேகர் மற்றும் செவிலியர்கள் ராஜேஸ்வரி, மகேஷ்வரி ஆகியோரை டீன் முருகேசன் பாராட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT