

சென்னை: கோடைகாலத்தில் வாகனங்களில் முழுமையாக எரிபொருள் நிரப்புவது ஆபத்தானது என சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
கோடைகாலம் தொடங்கி உள்ளநிலையில், வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களது வாகனங்களில் எரிபொருளை முழுவதுமாக நிரப்பவேண்டாம். பாதியளவு நிரப்பினால் போதும் என சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக தகவல் பரவி வருகிறது.
இதுகுறித்து, இந்தியன் ஆயில்நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது: ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் தங்கள் வாகனங்களை செயல்திறன் தேவைகள், பாதுகாப்பு காரணிகளுடன் சுற்றுப்புற நிலைமைகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டே வடிவமைக்கின்றனர்.
எனவே, குளிர்காலம் அல்லது கோடைகாலம் எதுவாக இருந்தாலும், உற்பத்தியாளரால் குறிப்பிடப்பட்ட முழு வரம்புக்குள் வாகனங்களில் எரிபொருளை நிரப்புவது முற்றிலும் பாதுகாப்பானது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.