

மேகேதாட்டுவில் புதிய அணைகள் கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் நடத்தப்படும் போராட்டத்துக்கு அதிமுகவின் ஆதரவை, தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு கோரியுள்ளது.
கர்நாடக மாநிலம் மேகேதாட்டுவில், காவிரியின் குறுக்கே புதிய அணைகள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் விவசாய சங்கங்கள் தொடர்ந்து பேராட்டம் நடத்தி வருகின்றன. புதிய அணைகளுக்கு எதிராக தமிழக அனைத்து விவசாயிகள் சங் கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த விவசாயிகள் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் டெல்லியில் சமீபத்தில் போராட்டம் நடத்தினர். நேற்று முன்தினம் தமிழகம் வந்த இவர்கள், நேற்று காலை, போயஸ் தோட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா இல்லத்துக்கு சென்று போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு மனு அளித்தனர்.
இது தொடர்பாக, பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:
கர்நாடக மாநிலம் மேகேதாட்டு வில் புதிய அணைகளை கட்டி தமிழகத்தை பாலைவனமாக்க முயற்சிக்கின்றனர். புதிய அணைகள் கட்டுவதால், 25 மாவட்டங்களைச் சேர்ந்த 5 கோடி மக்களுக்கு குடிநீர் ஆதாரம் பறிபோகும் ஆபத்து உள்ளது. இதனால் 20 லட்சம் ஏக்கர் நிலம் பாலைவனமாகும். விவசாயிகள் அகதிகளாகும் நிலை ஏற்படும். இதை மத்திய அரசும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியம், ஒருங்கிணைப்புக் குழுவை அமைக்க காலம் தாழ்த்தி வருகிறது. இது தொடர்பாக பிரதமரை சந்திக்க முயன்றும் முடியவில்லை. கடந்த 28-ம் தேதி உச்ச நீதிமன்றம், காவிரி தொடர்பான வழக்குகளை விரை வில் விசாரிக்க உத்தரவிட்டது. ஆனால், கர்நாடக அரசு இதை தடுக்க வேண்டும் என்ற உள்நோக் கத்துடன், ஜூலை மாதம் வரை விசாரிக்க அவகாசம் பெற்றுள்ளது. அத்துடன் கர்நாடக விவசாயிகளை தூண்டிவிட்டு, மேகேதாட்டுவில் புதிய அணைகளை கட்ட பூமி பூஜையையும் போட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மத்திய அரசும் மறைமுகமாக இதற்கு ஆதரவு அளிக்கிறது. பிரதமர் மவுனமாக இருப்பதை கர்நாடகம் சாதகமாக பயன்படுத்து கிறது. எனவே, தமிழகத்தில் வரும் 12-ம் தேதிக்குள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த திட்டமிட் டுள்ளோம். இதற்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளின் ஆதரவை கோரி வருகிறோம். நேற்று (நேற்று முன்தினம்) திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணியை சந்தித்து ஆதரவு கோரினோம். இன்று, முதல்வர் ஜெயலலிதாவிடம் ஆதரவு கோரியுள்ளோம். அதிமுகவில் தற்போது நேர்காணல் நடப்பதால், மனுவை அளித்துள்ளோம். இந்த விவகாரத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என் பதையும் வலியுறுத்தியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.