மாதவரம் - சோழிங்கநல்லூர் தடத்தில் மெட்ரோ ரயில் பாதை பணிகள் தொடக்கம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: சென்னையில் 2-வது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம்-சோழிங்கநல்லூர் வழித் தடத்தில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

சென்னையில் முதல்கட்ட மெட்ரா ரயில் திட்டம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், 118.9 கி.மீ. நீளத்தில் 3 வழித்தடங்களுடன் ரூ.61,843 கோடி செலவில் 2-வது கட்ட மெட்ரோ ரயில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மத்திய அரசு, தமிழக அரசு, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை, ஆசிய மேம்பாட்டு வங்கி, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் புதிய மேம்பாட்டு வங்கி ஆகியவை இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன.

மாதவரம்-சிப்காட் வரை 48 கி.மீ. நீளம் அமையவுள்ள தடத்தில் 30 சுரங்கப் பாதைகள் உட்பட 50 மெட்ரோ ரயில் நிலையங்களும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.10 கி.மீ. நீளத்தில் அமையவுள்ள தடத்தில் 18 உயர்த்தப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் உட்பட 30 ரயில் நிலையங்களும், மாதவரம்- சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ. நீளத்தில் அமைக்கவுள்ள தடத்தில் 42 உயர்த்தப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் உட்பட 48 ரயில் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன.

இந்த மெட்ரோ ரயில் திட்டத்தில் இரட்டை சுரங்கங்கள் தோண்டுவதற்காக 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

இந்நிலையில், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரையிலான 47 கி.மீ. நீள தடத்தில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் அண்மையில் தொடங்கப்பட்டுள்ளன. வரும் 2025-ம் ஆண்டுகள் இப்பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வழித் தடத்தில் மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, ஈச்சங்காடு, கோவிலம்பாக்கம், வெள்ளக்கல், மேடவாக்கம் கூட்ரோடு, காமராஜ் கார்டன் தெரு, மேடவாக்கம் சந்திப்பு, பெரும்பாக்கம், குளோபல் மருத்துவமனை மற்றும் எல்காட் ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இதன் மூலம் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோயம்பேடு பேருந்து நிலையம், விமானநிலையம், தி.நகர், மெரினா கடற்கரை ஆகிய இடங்களுக்கு எளிதில் செல்ல முடியும்.

மேலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ள பழைய மகாபலிபுரம் சாலை, போரூர் ஆகிய பகுதிகளும் இணைக்கப்படும். இந்த 3 வழித்தடப் பணிகளும் முடிந்த பின்னர், சென்னையில் 173 கி.மீ. நீளத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். தினமும் சுமார் 25 லட்சம் பேர் பயணம் செய்யலாம் என்று மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in