தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு '181' இயங்குவது எப்படி? - ஒரு தெளிவுப் பார்வை

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு '181' இயங்குவது எப்படி? - ஒரு தெளிவுப் பார்வை
Updated on
3 min read

'181'-க்கு ஓர் அழைப்பு... உங்களுக்காக என்னவெல்லாம் செய்யும் என்பதைத் தெரியப்படுத்துவதே இந்தக் கட்டுரையின் இலக்கு. இந்த தொழில்நுட்ப யுகத்தில் தனக்கென தனியாக செல்போன் இல்லாதோர் மிக மிகக் குறைவானவர்களாகவே இருக்கக்கூடும். அதுவும், கரோனா புகுத்திய ஆன்லைன் வகுப்புகளால் மாணாக்கர் கைகளில் செல்போன் எளிதாக சென்று சேர்ந்துவிட்டது. இந்த செல்போன் வாயிலாக பல்வேறு குற்றங்களும் அன்றாடம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதில் பாலியல் குற்றங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. செல்போனில் ஃபேஸ்புக், இன்ஸ்டா, ட்விட்டர், ஷாப்பிங் ஆப், டேட்டிங் ஆப், மேம் ஆப் என பல ஆப்களை வைத்துள்ள இளம் தலைமுறையின் '181' என்ற எண்ணை சேமித்து வைத்துக் கொள்வதும் அவசியம்.

'181'-க்கு ஓர் அழைப்பு... உங்களுக்காக என்னவெல்லாம் செய்யும் தெரியுமா? - * விருதுநகரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் 8 மாதங்களாக இரண்டு சிறுவர் உட்பட 5 பேரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். அந்தத் தொல்லையைத் தாங்க முடியாத அந்த இளம்பெண் '181' எண்ணை அழைத்துப் புகார் தெரிவித்தார். இந்த எண்ணைப் பயன்படுத்தி புகார் செய்ததன் மூலம் அவர் எதிர்கொண்ட துன்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி சட்டப்பேரவையில் முதல்வர் உத்தரவிட்டார்.

* மயிலாடுதுறையைச் சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் மனநலன் பாதிக்கப்பட்டதால் அடிக்கடி தற்கொலைக்கு முயல்வதாக 181-க்கு அவரது அண்டை வீட்டார் புகார் தெரிவித்தனர். அந்தப் பெண்ணை பாதுகாக்க முடியாமல் அவரது தாத்தாவும், சிறு வயது தம்பியும் சிரமப்படுவதாகக் கூறினர். இதனையடுத்து அப்பெண் குறித்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தப் பெண் மீட்கப்பட்டு மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

* வேலூரைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவரை அவரது 60 வயது தாய்மாமன் பாலியல் ரீதியாக பயன்படுத்தி வந்துள்ளார். அந்தச் சிறுமி 60 வயது மாமனை தன் கணவன் என நம்பிவந்துள்ளார். இதற்கு சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்துள்ளார். இது குறித்து தகவல் அக்கம்பக்கத்தினர் வாயிலாக 181-ஐ எட்ட, வேலூர் காவல்துறையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு சிறுமி மீட்கப்பட்டார். சிறுமியின் தாயும், மாமனும் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

மேற்கூறிய சம்பவங்கள் எல்லாம் 181 வாயிலாக நடந்த சில நன்மைகள். இந்த எண்ணிற்கு அழைத்ததன் மூலம் தமிழகத்தில் குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. குடும்ப வன்முறைகளில் இருந்து பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். மனநல ஆலோசனைகளை பெண்கள் பெற்றுள்ளனர். சட்ட வழிகாட்டுதல்களைப் பெற்று தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளனர். டேட்டிங் வன்முறையில் இருந்து மீண்டுள்ளனர். நிதி ரீதியான அச்சுறுத்தல்களில் இருந்து விடுபட்டுள்ளனர். இப்படி பற்பல நன்மைகள் நடந்துள்ளன.

எதற்காக, எப்போது அறிமுகமானது? - 181 என்பது மகளிருக்கான உதவி எண். இது கட்டணமில்லா தொலைபேசி எண். இது முதன்முதலில் தலைநகர் டெல்லியில் தான் தொடங்கப்பட்டது. டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். நிர்பயா என அரசால் அடையாளப்படுத்தப்படும் அவரின் வழக்குக்குப் பின் நீதிபதி வர்மா ஆணையம் பல்வேறு பரிந்துரைகளையும் அளித்தது. பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனையும் அவரால் தான் பரிந்துரைக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது.

இந்நிலையில், மத்திய அரசு நிர்பயா நிதி என்ற நிதியை ஏற்படுத்தியது. இந்த நிதி ஒதுக்கீட்டின் கீழ் தான் மகளிருக்கான உதவி எண் 181 தொடங்கப்பட்டது. முதலில் டெல்லியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவை இப்போது குஜராத், மும்பை, ஹைதராபாத் என ஆறு இடங்களில் அந்தந்த மாநில போலீஸாரின் உதவியுடன் சேஃப் சிட்டி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 2018 டிசம்பர் 10 முதல் இச்சேவை செயல்படுகிறது. இங்கு அன்றாடம் குடும்ப வன்முறை, சொத்துரிமை பிரச்சினைகள், குடிகார கணவர்கள், வரதட்சணை கொடுமை, திருமணத்தை மீறிய உறவால் எழும் சிக்கல்கள், பாலியல் தொந்தரவுகள், பாலியல் ரீதியான மிரட்டல்கள் என பலதரப்பட்ட புகார்கள் வருகின்றன.

3 ஸ்டெப் சொல்யூஷன்... - 181 கட்டணமில்லா தொலைபேசி சேவையை ஒருவர் அழைக்கும் போது அந்த நபரின் புகார் தன்மை முதலில் அதன் வீரியத்தின் அடிப்படையில் க்ரைஸிஸ், நான் க்ரைஸிஸ் அதாவது தீவிரமான, தீவிரத்தன்மை குறைவான என்றளவில் பிரிக்கப்படுகிறது. பிரச்சினையின் தீவிரம் கருதி சில நேரங்களில் அவை 100-க்கு மடைமாற்றப்படுகின்றன. சில நேரங்களில் பெண்கள் ஆலோசனைகள் கேட்டோ, புகலிடம் கோரியோ அழைப்பார்கள். அப்படியான நேரத்தில் அதற்கான சரியான அமைப்புடன் தொடர்பில் இணைக்கப்படுவர். அதற்காக அனைத்து மாவட்டங்களிலும் ஒன் ஸ்டாப் சென்டர்கள் உள்ளன.

இது பெண் குழந்தை, இளம் பெண், மூதாட்டி என அனைத்துத் தரப்பு பெண்களுக்கும் அவர்களுக்கான பிரச்சினைகளுக்கான தீர்வைக் கண்டறிய உருவாக்கப்பட்டது. எங்கள் மையம் மூலம் பெண்கள் அவர்களின் பிரச்சினையை புரிந்து கொண்டு தெளிவான மனநிலையில் முடிவுகளை எடுக்க உதவி செய்கிறது. உளவியல் ரீதியான, சட்ட ரீதியான, காவல்துறை ரீதியான அனைத்து உதவிகளையும் செய்வதோடு மறுவாழ்வு என்பதையும் உறுதி செய்கிறது.

ஸ்கில் ட்ரெய்னிங் மூலம் வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்கிறது. சிலர் குழந்தைகளாக இருக்கும்போது ஒன் ஸ்டாப் சென்டரை அணுகியிருக்கலாம் அவர்கள் 18 வயதை அடையும் போது அவர்களுக்கான உயர் கல்வி, தொழிற்கல்வி கிடைப்பதை உறுதி செய்கிறது இந்த ஒன் ஸ்டாப் சென்டர். முதியோர் இல்லம் தேடும் மூதாட்டிக்கும் ஒன் ஸ்டாப் சென்டரில் தீர்வு கிட்டுகிறது.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குடும்பத்தினருடன் சேர்த்தே ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. அப்போது குழந்தைகளுக்கும் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு, குடும்பப் பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு குழந்தைமையை அனுபவிக்க சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

இணையதளத்திலும் புகார்.. - 181 எண்ணை அழைத்துப் புகார் சொல்ல இயலாத நேரத்தில் https://tn181whl.org/tamil/ என்ற இணையதளத்திற்குச் சென்று அங்குள்ள சேட் (Chat) சேவையைப் பயன்படுத்தியோ இ ஃபார்ம் பயன்படுத்தியோ புகார் அளிக்கலாம். 24 மணி நேரமும் இயங்கக் கூடிய டோல் ஃப்ரீ எண்ணைப் பற்றி அறிந்து கொள்வதோடு அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in