Published : 24 Mar 2022 08:23 AM
Last Updated : 24 Mar 2022 08:23 AM
மதுரை: விருதுநகரில் பாலியல் குற்றச் செயல்களில் சிறுவர்கள் கைதானது அதிர்ச்சி அளிக்கிறது. பாலியல் குற்றங்களுக்குப் போதை பழக்கமும் காரணமாக உள்ளது என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு மதுரையில் மார்ச் 30, 31 மற்றும் ஏப்.1-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளோம்.
தமிழகப் பல்கலைக்கழகங்களில் வேந்தர் என்ற பதவியை பயன்படுத்தி ஆளுநர் மூலம் கல்வி நிறுவனங்களை காவிமயமாக்கும் முயற்சி நடைபெறுகிறது. மத்திய அரசிடம் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்யும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு டீசல் லிட்டர் ரூ.25 உயர்வால் ரூ.1,400 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்.
சர்வதேசச் சந்தையைவிடரஷ்யாவில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தும் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக விலை உயர்த்தப்படுகிறது.
விருதுநகர் பாலியல் குற்றச்சம்பவத்தில் கைதான 8 பேரில்சிறுவர்களும் இருப்பது அதிர்ச்சிஅளிக்கிறது. பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு போதைப் பழக்கமும் ஒரு காரணம். எனவே, தமிழக அரசு போதைப்பொருட்களை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும்.
முன்னதாக, கட்சியின் மாநில மாநாட்டுக்கான ஆயத்தக் கூட்டம் மகபூப்பாளையம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார்.
இக்கூட்டத்தில் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் வெங்கட்ராமன், மதுக்கூர் ராமலிங்கம், சு.வெங்கடேசன் எம்பி, மாநிலக் குழு உறுப்பினர்கள் சி.ராமகிருஷ்ணன், ரா.விஜயராஜன், மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT