சிறைவாசிகளுக்கு உதவும் வகையில் புதுச்சேரி உள்ளிட்ட 15 சிறைகளில் ஐஓசி சார்பில் விளையாட்டு பயிற்சி

ஐஓசி தலைவர் ஸ்ரீகாந்த் வைத்யா
ஐஓசி தலைவர் ஸ்ரீகாந்த் வைத்யா
Updated on
1 min read

சென்னை: சிறைக் கைதிகள் விடுதலைக்குப் பிறகு சமூகத்தில் சகஜமாக வாழ உறுதுணை புரியும்வகையில், ‘பரிவர்த்தன் - சிறையிலிருந்து பெருமை மிக்க வாழ்வுக்கு’ என்ற திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் முதல்கட்டம் கடந்த 2021-ம் ஆண்டு சுதந்திர தினத்தின்போதும், 2-ம் கட்டம் மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதியும்தொடங்கப்பட்டது. இதன்மூலம் 1,100-க்கும் மேற்பட்டசிறைவாசிகளுக்கு விளையாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது 3-ம் கட்டமாக இத்திட்டம் 8 மாநிலங்கள், புதுச்சேரி உள்ளிட்ட 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 15 சிறைச்சாலைகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வை இந்தியன் ஆயில் நிறுவனத் தலைவர் காந்த் வைத்யா புதுடெல்லியிலிருந்து காணொலி மூலம் தொடங்கி வைத்தார். அதேசமயம் புதுச்சேரி மத்தியச் சிறையில், புதுச்சேரி சிறைத் துறைத் தலைவர் ரவிதீப் சிங், ஐஓசி தென்மண்டல செயல் இயக்குநர் (மண்டல சேவை) கே.சைலேந்திரா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இத்திட்டத்தின் மூலம் 500 சிறைவாசிகளுக்கு விளையாட்டுப் பயிற்சி அளிக்கப்படுகிறது. சிறைவாசம் அனுபவித்த காரணமாக உண்டாகும் தாழ்வு மனப்பான்மையைப் போக்கி, விடுதலைக்குப் பிறகுஅவர்கள் சமூகத்தில் சகஜமாக வாழ உறுதுணை புரியஇந்த முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் ஐஓசி தலைவர் வைத்யா கூறும்போது, “இதுபோன்ற தனித்தன்மை வாய்ந்த திட்டத்தைச் செயல்படுத்தும் முதல் கார்ப்பரேட் நிறுவனம் என்ற பெருமையை ஐஓசி பெற்றுள்ளது. இது சமூகத்தில் நல்ல அதிர்வுகளை ஏற்படுத்தி மனமாற்றம் பெற்ற நல்ல குடிமக்களை உருவாக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in