

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா உட்பட அதிமுக கூட்டணியில் போட்டியிடும் 234 வேட்பாளர்களும் ஏப்ரல் 28-ம் தேதி ஒரே சமயத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்கின்றனர்.
முன் எப்போதும் இல்லாத வகையில் சட்டப்பேரவைத் தேர்தலில் முக்கியக் கட்சிகள் ஏற்கெனவே அறிவித்த வேட்பாளர்களை, தொடர்ந்து மாற்றம் செய்து வருகின்றன. இதில் அதிகபட்சமாக அதிமுகவில் இதுவரை தமிழகத்தில் 23 வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். 3 பேர் தொகுதி மாற்றப்பட்டுள்ளனர். ஒரு தொகுதி கூட்டணிக் கட்சிக்காக மாற்றிக் கொடுக்கப்பட்டதால் ஒரு வேட்பாளரை திரும்பப்பெற்று புதிதாக ஒரு வேட்பாளரை அதிமுக அறிவித்தது.
அந்தக் கட்சியில் இன்னும் மாற்றம் இருக்கலாம் என்று சொல்லப்படும் நிலையில், இன்று (ஏப்ரல் 23) இன்னும் சில வேட்பாளர்கள் மாற்றப்பட்டு வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படலாம் எனவும் முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படலாம் எனவும் அதிமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம், ஜோதிடர்களின் வாஸ்து கணிப்புப்படி 28-ம் தேதி சஷ்டி நாளில் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். 27-ம் தேதி மதுரையிலும் 29-ம் தேதி விழுப்புரத்திலும் ஜெயலலிதா பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனு தாக்கலுக்காக சென்னையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே ஏப்ரல் 28-ல் ஜெயலலிதாவின் பிரச்சாரப் பயணம் ஏதும் திட்டமிடப்படவில்லை. இதே தேதியில், அதிமுக கூட்டணியில் போட்டியிடும் எஞ்சிய 233 வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து, ஜோதிடர்களின் அறிவுறுத்தல்படி மே 5-ம் தேதி அதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிடவும் அதிமுக தலைமை திட் டமிட்டுள்ளது.