Published : 15 Apr 2016 03:41 PM
Last Updated : 15 Apr 2016 03:41 PM

மக்கள் நலக் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஏமாற்றம்: வேலூரில் ஒரு தொகுதிகூட ஒதுக்கப்படவில்லை

மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வேலூர் மாவட்டத்தில் ஒரு தொகுதிகூட ஒதுக்கப்படவில்லை. இதனால் தொண்டர்களும் நிர்வாகிகளும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றாவது அணியாக மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக, தமாகாவினர் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். கடந்த சில நாட்களாக கூட்டணிக் கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நிலை இருந்தது.

இதற்கிடையில், தேமுதிக சார்பில் 104 தொகுதியில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் நேற்று முன்தினம் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து, பிற கட்சிகள் இடையிலான தொகுதிகள் பங்கீட்டில் இருந்த சிக்கல் தீர்க்கப்பட்டது. 234 தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகள் குறித்த பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார் பேட்டை, ஆம்பூர், கே.வி.குப்பம் (தனி), ராணிப்பேட்டை, சோளிங்கர் என 6 தொகுதிகளில் தேமுதிகவினர் போட்டியிடு கின்றனர். தமாகாவுக்கு வாணியம்பாடி, அணைக்கட்டு, காட்பாடி தொகுதி, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அரக்கோணம் (தனி), வேலூர் தொகுதி, மதிமுகவுக்கு ஆற்காடு தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு குடியாத்தம் (தனி) தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வேலூர் மாவட்டத்தில் மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக, தமாகா கூட்டணியின் ஒருங்கிணைப்பில் ஈடுபட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு தொகுதிகூட ஒதுக்கீடு செய்யாதது, அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண் டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் கூறும் போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி பலத்துடன் இருக்கிறது. அரசு ஊழியர் சங்கங்கள், பீடித் தொழிலாளர்கள் மற்றும் பிற தொழிலாளர் சங்கங் கள் என கட்சியின் செயல்பாட்டில் எந்த குறையும் இல்லை.

வேலூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் 3 முறை தேர்வாகி உள்ளனர். மக்கள் நலக் கூட்டணியில் கே.வி.குப்பம் (தனி), வேலூர், திருப்பத்தூர் தொகுதிக்கு முன்னரிமை கொடுத்தோம். சில நாட்களுக்கு முன்பு கே.வி.குப்பம் தொகுதி எங்களுக்கு இறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கே.வி.குப்பம் தொகுதியில் உற்சாகமாக களப்பணியை தொடங்கினோம். 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சுவர் விளம்பரங்கள் வரைந்தோம். கடைசி நேரத்தில் எங்களுக்கு கே.வி.குப்பம் வழங்க முடியாத நிலையில், வேறு எந்த தொகுதியையும் வழங்காதது வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது’’ என்றனர்.

இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தயாநிதி கூறும்போது, ‘‘முயற்சி செய்தும் தொகுதி கிடைக்கவில்லை. கே.வி.குப்பம் தங்களது சொந்தத் தொகுதி என்று தேமுதிகவினர் கேட்டுப் பெற்றுள்ளனர். மாவட்டத்தில் எங்களுக்கு வாய்ப்பு இல்லாததால் சேவை செய்வோம். கடந்த தேர்தலிலும் நாங்கள் வேலூர் மாவட்டத்தில் போட்டியிடவில்லை. மக்கள் நலக் கூட்டணியில் எங்களுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யாதது வருத்தமாக இருந்தாலும், கட்சிப் பணியில் தயக்கம் இல்லாமல் ஈடுபடுவோம்’’ என்றார்.

இதற்கிடையில், வேலூர் தொகுதியை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், வாணியம்பாடி, காட்பாடி, அணைக்கட்டு தொகுதிகளை தமாகாவுக்கு வழங்கியதால் கூட்டணிக் கட்சிகள் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக கூட்டணியில் கடைசியாக இடம் பிடித்த தமாகாவில் காட்பாடி தொகுதிக்கு கல்வி உலகம் சிவானந்தம், அணைக்கட்டில் பி.எஸ்.பழனி, வாணியம்பாடியில் முன்னாள் எம்எல்ஏ. சி.ஞானசேகரன் ஆகியோர் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x