

வருவாய், வேலைவாய்ப்பு, தகவல் தொழில்நுட்பத் துறைகளில் 5 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட 55 அறிவிப்புகளும் செயல்பாட்டில் உள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கடந்த 5 ஆண்டுகளில் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ், நான் அறிவித்த எதையும் நிறைவேற்றவில்லை என கருணாநிதியும், திமுகவினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். துறை தோறும் நான் வெளியிட்ட அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஏற்கனவே 3 துறைகள் பற்றி விரிவாக தெரிவிக்கப்பட்டது. தற்போது மேலும் 3 துறைகளின் விவரங்கள் அளிக்கிறேன்.
வருவாய்த்துறை
முதல்வரின் உழவர் பாதுகாப்புத்திட்டம் கடந்த 2011 செப்டம்பர் 10-ம் தேதி முதல் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் கடந்த மார்ச் 31-ம் தேதி வரை, ரூ.3 ஆயிரத்து 40 கோடி அளவுக்கு 37 ஆயிரத்து 68 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
வருவாய் நிர்வாக ஆணையர், நில நிர்வாக ஆணையர் மற்றும் நிலச்சீர்திரத்த ஆணையரை கொண்ட குழு அமைக்கப்பட்டு இக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 65 வட்டங்கள் பதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
அனைத்து மாணவ, மாணவியருக்கும் அவர்கள் படிக்கும் பள்ளியிலேயே ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இதுவரை 42 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வறட்சியால் மகசூல் இழப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் 58 ஆயிரத்து 719 பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. ரூ.145 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னையில் எழும்பூர், தண்டையார்ப்பேட்டை, மதுரையில் மேலூர், கோவையில் கோவை(வடக்கு), விருதுநகரில் சாத்தூர் என 5 வருவாய் கோட்டங்கள் தோற்றவிக்கப்பட்டுள்ளன.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.64.70 கோடி செலவில் 38 ஆயிரத்து 505 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கும் வழங்கப்பட்டதால் 3 ஆயிரத்து 748 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.
திருச்சி, விழுப்புரம், கடலூர், நெல்லை, திருப்பூர் ஆகிய இடங்களில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பிறமாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்த 15 ஆயிரத்து 769 கட்டுமானத் தொழிலாளர்கள் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
தகவல் தொழில்நுட்பவியல் துறை
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி முதல் ஒளிபரப்பு சேவையைத் தொடங்கி, 26ஆயிரத்து 246 உள்ளூர் கேபிள்டிவி ஆபரேட்டர்கள் மூலம் ரூ.70 மாத சந்தாவில் 70 லட்சத்து 52 ஆயிரம் சந்தாதாரர்களுக்கும் 90 முதல் 100 சேனல்களை வழங்கி வருகிறது.
அரசின் திட்டங்கள் மக்களை விரைவில் சென்றடைய திட்டங்களின் செயல்பாட்டை காலமுறை அடிப்படையில் கண்காணிக்கும் புதிய கண்காணிப்பு மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
அரசு கேபிள் டிவி வாயிலாக, மாநிலம் முழுவதும் அதிவேக அகண்ட அலைவரிசை சேவைகள், முதல்கட்டமாக ஆயிரத்து 100 இல்லங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மூன்று துறைகளிலும் வெளியிடப்பட்ட 55 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன'' என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.