”மாதா, பிதா, குரு, கூகுள், தெய்வம்...” - தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து ஆளுநர் தமிழிசை பேச்சு

”மாதா, பிதா, குரு, கூகுள், தெய்வம்...” - தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து ஆளுநர் தமிழிசை பேச்சு
Updated on
1 min read

புதுச்சேரி: தொழில் நுட்ப வளர்ச்சியானது நேர்மையான வளர்ச்சிகளுக்கு வழிவகுக்க வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு-புதுச்சேரி தகவல் தொழில்நுட்ப சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 'தகவல் தொழில்நுட்ப மாநாடு 2022, தனியார் பீச் ரிசார்ட்டில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியது: ‘‘இன்றைய நவீனமயமாதலின் தேவையை உணர்ந்து பிரதமர் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை முன்னெடுத்தார். தொழில்நுட்ப வளர்ச்சி மருத்துவம், கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மிக பிரமாண்டமான வளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பல துறைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருந்து வருகிறது. கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி கல்வித்துறையின் வளர்ச்சிக்கும் செயல்பாட்டுக்கும் மிகவும் உறுதுணையாக இருந்தது.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது மாதா, பிதா, குரு, கூகுள், தெய்வம் என்று சொல்லும் அளவுக்கு உருவாகி இருக்கிறது. பிரதமர் 'பீம்' என்ற பண பரிவர்த்தனை செயலியை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். அப்போது நாட்டில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்போது அது அம்பேத்கரின் பெயரில் இருக்க வேண்டும் என்று விளக்கமளித்தார்.

தொழில்நுட்ப வளர்ச்சி இன்று கடைக்கோடி மக்களுக்கும் சென்று சேர்ந்திருக்கிறது. உக்ரைனில் போர் காரணமாக மாணவர்கள் இந்தியா வந்து விட்டார்கள். ஆனாலும் அவர்களுக்கான வகுப்புகள் இன்று முதல் இணையவழியில் தொடங்கி விட்டது. இதுவே தொழில்நுட்பத்தின் சாதனையும் பயன்பாடும்.

தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்களுக்கு என்னோட தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால், தொழில்நுட்ப வளர்ச்சி நேர்மையான வளர்ச்சிக்கு வழிவகுக்க வேண்டும். இளைஞர்களுக்கு அதற்கான முயற்சியும், பயிற்சியும் அளிக்க வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சியில் நாம் கவனம் செலுத்துகின்ற அதேவேளையில் இயற்கை, பண்பாடு ஆகியவற்றை பாதுகாப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது அது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும். அதனால் இன்னும் அதிகமாக பணியாற்ற முடியும் என்பார் பிரதமர். டிஜிட்டல் இந்தியா இன்று உலகிற்கே வழிகாட்டி வருகிறது. செயற்கை அறிவுத்திறன் எல்லா விதத்திலும் மிகவும் உதவியாக இருந்து வருகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியம். தொழில்நுட்பத் துறையில் இருப்பவர்கள் தங்கள் உடல் நலத்திலும் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். உடல் நலத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எல்லா சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ வேண்டும்.’’என்றார்.

இந்த மாநாட்டில் தமிழகம், புதுச்சேரி தகவல் தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in