எஸ்.சி, எஸ்.டி நலத்துறையால் 5 ஆண்டுகளில் ரூ.927 கோடி பயன்படுத்தப்படாமல் திருப்பி ஒப்படைப்பு: ஆர்டிஐ தகவல்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
2 min read

மதுரை: கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.927 கோடி பயன்படுத்தப்படாமல் அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக தெரியவந்துள்ளது.

இந்த ஆண்டு தமிகழ பட்ஜெட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு என ரூ.4,281 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோல், ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என்று பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும். ஆனால் அவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக அந்தத்துறை சார்ந்த திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டு, அவை முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை பொது மக்கள் வெளிப்படையாக அறிந்து கொள்ள முடிவதில்லை.

இந்த நிலையில், மதுரை ஊமச்சிக்குளத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் கடந்த 2011-12 முதல் 2020-21 வரையிலான நிதியாண்டுகளில், செய்யப்பட்ட நிதி ஒதுக்கீடு மற்றும் செலவினங்களின் விபரங்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டிருந்தார்.

இதற்கு அளிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.927,61,68,000 (927 கோடி) நிதி செலவு செய்யாமல் அரசிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து மதுரை ஊமச்சிக்குளத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திக் கூறியது: ”கடந்த 2016-17 முதல் 2020-21 வரையிலான 5 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ரூ.15,192,38,98,000 (15,192 கோடி) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் ரூ.14,264,77,30,000 (14,264 கோடி) ரூபாய்க்கு செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீதம் ரூ.927,61,68,000 (927 கோடி) வரை பயன்படுத்தப்படாமல் அரசிற்கு திரும்பி ஒப்படைப்பக்கப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டான 2020-21 ல் ரூ.3,552,56,14,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் திட்டங்களுக்கு செலவு செய்தது போக ரூ.249 கோடியே 67 லட்சம் பயன்படுத்தாமல் அரசுக்கு திரும்ப சென்றுள்ளது.

இதற்கு முன்னர் 2015-16 நிதியாண்டில் ஒதுக்கிய நிதியை முழுமையாக பயன்படுத்தப்பட்டு மேலும் ரூ.213 கோடிகள் கூடுதலாக இத்துறையின் வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்படும் பட்டியல் சாதி மக்களுக்கு நிவாரண நிலுவை தொகைகள் முழுமையாக கிடைக்காமல் பல வருடங்களாக அவதிப்படும் மக்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர்.

ஆதிதிராவிடர் மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு, பள்ளிகள், விடுதிகள், நூலகங்கள், குடியிருப்பு பகுதிகளில் ஏற்படுத்த வேண்டிய அநேக வளர்ச்சி நலதிட்டங்கள் மேம்படுத்தப்படாமல் கிடப்பில் உள்ள நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் ரூ.927 கோடிகள் நிதி பயன்படுத்தாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழக அரசு இந்தாண்டு பட்ஜெட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ஒதுக்கிய ரூ.4,281 கோடி நிதியை முழுமையாக அனைத்து நலத்திட்டங்களுக்கும் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கடந்த 5 ஆண்டுகளில் பயன்படுத்தாமல் ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ள ரூ.927 நிதியை மீண்டும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு கிடைக்கபெற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்" என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in