

திருப்பத்தூர் அருகே சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய கற்குவைகள் கண்டெடுக்கப் பட்டுள்ளது.
திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் ஆ.பிரபு தலைமையிலான ஆய்வு மாணவர்கள் தரணிதரன், சந்தோஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் திருப்பத்தூர் அடுத்த ஏலகிரி மலையில் கள ஆய்வு மேற்கொண்ட போது, மிகப்பெரிய ஈமக்காடு ஒன்றை கண்டெடுத்துள்ளனர்.
இது குறித்து தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் ஆ.பிரபு கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையின் பின்புற சரிவில் நீலிக்கொல்லி என்ற பகுதியில் 15-க்கும் மேற்பட்ட கற்குவைகள் காணப்படுகின்றன. இதில், 3 கற்குவைகள் கல்வட்டத்துக்கு உள்ளே அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கற்குவைகளும் சுமார் 15 மீட்டர் சுற்றளவு கொண்ட பிரம்மாண்டமாக உள்ளன. ஒரு கற்குவைக்கு நடுவே கற்திட்டை அமைப்பும் காணப்படுவது சிறப்புக்குரியதாகும். இங்கு கற்குவைகளுக்கு அருகே 3 இரும்பு உருக்கும் ஆலை இருந்தற்கான தடயங்களும் காணப்படுகின்றன.
அங்கே இரும்பு உலைக்குள் காற்றினை செலுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ஊது குழாய்கள் நிறைய சிதறிக்கிடக்கின்றன. செவ்வக வடிவில் இரும்பு உருக்கும் உலை இருந்ததற்கான அடித்தளம் இன்னும் அதே நிலையில் காணப்படுவது சிறப்புக்குரியதாகும்.
இவை அனைத்தும் இங்கு பெருங்கற்கால மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதற்கான உறுதியான தடயங்களாக பார்க்கப்படுகிறது.
கற்குவைகள் என்பவை பெருங்கற்கால மக்களது ஈமச்சின்னங்கள் ஆகும். அன்றைய காலத்து மக்கள் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்துவிட்டு அந்த இடத்தை அடையாளம் காண்பதற்காக பல்வேறு அமைப்புகளை அங்கே ஏற்படுத்தி வைத்திருந்தனர்.
அவை கல்வட்டம், கற்திட்டை, கற்பதுக்கை, நெடுங்கல் போன்றவையாகும். அந்த வரிசையில் கற்குவை என்கிற அமைப்பும் அடங்கும். அதாவது, உயிரிழந்த ஒருவரை அக்கால மக்கள் அடையாளப்படுத்தியிருந்தனர். இப்படிப்பட்ட கற்குவைகள் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே இடத்தில் 15-க்கும் மேற்பட்டவை கிடைத்திருப்பது கவனத்துக்குரியதாகும். இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள கற்குவைகள் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு பழமையானதாக இருக்கக்கூடும்.
இந்த இடம் பெருங்கற்கால மக்கள் வாழ்ந்த பகுதி என்பதற்கான வலுவான தடயங்களை இந்த தடயங்கள் நமக்கு உணர்ந்துகின்றன.
ஏற்கெனவே இந்த ஊருக்கு அருகாமையில் குண்டு ரெட்டியூர் மலைப்பகுதியின் அடிவாரத்தில் இது போன்ற இரும்பு உருக்கும் ஆலை இருந்ததையும், அங்கே கற்கால மக்கள் வாழ்ந்தையும் எங்கள் ஆய்வுக்குழுவினர் அடையாளப்படுத்தியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, தற்போது கற்குவைகள் கண்டிருப்பது சிறப்புக்குரியதாகும். எனவே, இப்பகுதியில் மாவட்ட தொல்லியல் துறையினர் முறையாக ஆய்வு நடத்தினால் மேலும், பல ஆச்சரியமூட்டும் தகவல்கள் நமக்கு கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை’’ என்றார்.