

சென்னை: வாகன நெரிசலை குறைக்கும் வகையில் அண்ணா சாலையில் தற்காலிகமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை குறைக்கும் வகையில், போக்குவரத்து போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக அதிக நெரிசல் உள்ள பகுதிகள் அடையாளம் காணப்பட்டு வருகிறது. அதன்படி, அண்ணா சாலை, திருவல்லிக்கேணி வாலஜா சாலை சந்திப்பில் அதிக நெரிசல் ஏற்படுவது தெரியவந்தது.
இதையடுத்து அந்த பகுதியில் நெரிசலை குறைக்க போக்குவரத்து போலீஸார் முடிவு செய்தனர். அதன்படி, அண்ணா சாலையில் சோதனை முயற்சியாக தற்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அண்ணா சாலையில் இருந்து பாரிமுனை நோக்கிச் செல்லும் வாகனங்கள், அண்ணா சாலை தாராபூர் டவர் சிக்னலில் இருந்து, டாம்ஸ் சாலை வழியாக திருப்பி விடப்படும்.
டாம்ஸ் சாலையில் இருந்து வலது புறம் திரும்பி, பிளாக்கர்ஸ் சாலை வழியாக, அண்ணா சாலையை வாகனங்கள் அடையலாம். இதில், பாரிமுனை செல்லும் வாகனங்கள் இடது புறம் திரும்பியும், ராயப்பேட்டை நோக்கி செல்லும் வாகனங்கள் வலது புறம் திரும்பியும் செல்லும் விதமாக, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் குறையும் என, போக்குவரத்து போலீஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதேபோல் திருவல்லிக்கேணியிலிருந்து வாலாஜா சாலை வழியாக சிம்சன் சிக்னலுக்கு வலதுபுறம் திரும்ப அனுமதி இல்லை. மாறாக வாலஜா சாலை - அண்ணா சாலை சந்திப்பில் இடது புறம் திரும்பி அடுத்த சில மீட்டர் தூரத்தில் வலதுபுறமாக திரும்பி நேராக பாரிமுனை செல்லலாம். அல்லது வாலாஜா சாலை - அண்ணா சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி மெரினா நோக்கிச் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது.
சிம்சன் சிக்னல், வாலாஜா சாலை, தாராபூர் டவர்ஸ் என குறுகிய இடைவெளியில் மூன்று சிக்னல்கள் இருப்பதால் 'பீக் அவர்ஸில்' அதிகப்படியானப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் இந்தப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகளிடையே கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து இந்த போக்குவரத்து மாற்றத்தை தொடர்வது குறித்து ஆலோசிக்கப்படும் என போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்தப் போக்குவரத்து மாற்றத்தால் அண்ணா சாலை தலைமை தபால் நிலையத்துக்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக சில வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.