

மதுரை: கண்ணகி நீதி கேட்டுப் போராடிய மதுரையில், கோகுல்ராஜ் கொலையாளிகளுக்கு சரியான தண்டனை வழங்கப்பட்டுள்ளது என அரசு சிறப்பு வழக்கறிஞர் மோகன் தெரிவித்தார்.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் அரசுத் தரப்பில் பவானியைச் சேர்ந்த வழக்கறிஞர் மோகன் ஆஜரானார். தீர்ப்பு குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோகுல்ராஜ் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர். வேறு சமூகப் பெண்ணைக் காதலித்தார் என்பதற்காக அவரை திட்டமிட்டு கொடூரமாக கொலை செய்து உடலை தண்டவாளத்தில் வீசிச் சென்றனர். திருச்செங்கோடு போலீஸாரும், ரயில்வே போலீஸாரும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இவ்விரண்டு வழக்குகளையும் டிஎஸ்பி விஷ்ணுபிரியா விசாரித்து பலரைக் கைது செய்தார். அவரதுவிசாரணையில் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. பிரேதப் பரிசோதனையில் கோகுல்ராஜ் தற்கொலை செய்து கொள்ளவில்லை. கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதியானது.
இந் நிலையில் டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. நாமக்கல் நீதிமன்றத்தில் போலீஸார் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் யுவராஜ் உட்பட குற்றவாளிகள் ஜாமீனில் வெளியே வந்தனர்.
இதனால், கோகுல்ராஜ் தாயார் சித்ராவின் கோரிக்கையை ஏற்று வழக்கு விசாரணை மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. விசாரணை முடிந்த நிலையில் குற்றவாளிகளுக்கு நேற்று தண்டனை வழங்கப்பட்டது. அப்போது சித்ரா தரப்பில், கோகுல்ராஜ் சித்ரவதை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதனால் குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. அரசுத் தரப்பிலும் இந்த வழக்கு அரிதினும் அரிதான வழக்கு என வாதிட்டோம். இருப்பினும் யுவராஜ் உட்பட 10 பேருக்கு சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனையும், பலருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுஉள்ளது. இவர்களைப் போன்றவர்கள் சமூகத்தில் நடமாடினால் தொடர்ந்து குற்றங்கள் அதிகரிக்கும் என்பதால் இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இத் தண்டனையால் குற்றவாளிகள் ஜாமீனில் வெளிவர முடியாது. மேலும், தண்டனைக் குறைப்புச் சலுகையும் பெற முடியாது.
கண்ணகி நீதி கேட்டுப் போராடிய மதுரையில் பட்டியல் இன இளைஞர் கொலைக்கு குற்றவாளிகளுக்குச் சரியான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு சமூகநீதிப் போராட்டம். இதற்காக என்னுடன் சேர்ந்து போராடிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
தண்டனை பாடமாக இருக்கட்டும்
கோகுல்ராஜ் தாயார் சித்ரா கூறுகையில், எனது மகனுக்கு நேர்ந்தது போன்ற கொடூரம் வேறு யாருக்கும் நடக்கக் கூடாது. எனது மகனின் கொலையாளிகளுக்கு அதிகபட்சமாக தூக்குத் தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்த்தேன். இருந்தபோதும் தற்போது அளிக்கப்பட்ட தண்டனையே கொடூரமானதுதான். இனி இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க இந்தத் தண்டனை பாடமாக இருக்கட்டும், விடுதலை செய்யப்பட்ட 5 பேருக்கும் தண்டனை கிடைக்க வேண்டும். இதற்காக மேல்முறையீடு செய்யப்படும் என்றார்.
பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலையில் யுவராஜ் உட்பட 10 பேருக்கு இறுதிமூச்சு வரை சிறை: மதுரை சிறப்பு நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு
கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியதோடு அவர்கள் இறுதி மூச்சு வரை சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என மதுரை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். தலித் இளைஞரான இவர், வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்தார். இதனால் 2015 ஜூன் 24-ல் பள்ளிப்பாளையத்தை அடுத்த கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில் பாதையில் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
சிபிசிஐடிக்கு மாற்றம்
இது தொடர்பாக திருச்செங்கோடு போலீஸார் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது சகோதரர் தங்கதுரை, அருள்செந்தில், செல்வக்குமார், குமார் (எ) சிவக்குமார், கார் ஓட்டுநர் அருண், சங்கர், செல்வராஜ், ஜோதிமணி, ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், சதீஷ்குமார், சுரேஷ், பிரபு, கிரி, அமுதரசு, சந்திரசேகரன் ஆகிய 17 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஜோதிமணி இறந்துவிட்டார். அமுதரசு தலைமறைவாகி விட்டார்.
சிறப்பு நீதிமன்றம்
இந்த வழக்கு நாமக்கல் நீதிமன்றத்தில் இருந்து மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றத்தால் 2019-ல் மாற்றப்பட்டது.
கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வந்த விசாரணை முடிவுற்ற நிலையில், யுவராஜ், குமார் (எ) சிவகுமார், கார் ஓட்டுநர் அருண், செல்வராஜ், ரகு என்ற தர், ரஞ்சித், சதீஷ்குமார், பிரபு, கிரி, சந்திரசேகர் ஆகிய 10 பேர் குற்றவாளிகள் என மார்ச் 5-ம் தேதி நீதிபதி சம்பத்குமார் அறிவித்தார். சங்கர், அருள் செந்தில், செல்வக்குமார், தங்கதுரை, சுரேஷ் ஆகியோர் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது. இதற்காக நீதிபதி சம்பத்குமார் முன் யுவராஜ் உட்பட 10 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 10 பேரும் நாங்கள் நிரபராதிகள் என நீதிபதியிடம் கூறினர்.
பின்னர் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியதாவது: முதல் குற்றவாளி யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனை, ரூ. 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அருண், குமார் என்ற சிவகுமார், சதீஷ்குமார், ரகு என்ற தர், ரஞ்சித், செல்வராஜ் ஆகியோருக்கு தலா 2 ஆயுள் தண்டனை, தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. பிரபு, கிரிதர் ஆகியோருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை, தலா 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை, தலா ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. சந்திரசேகரனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.
தண்டனை பெற்ற யுவராஜ் உட்பட 10 பேரும் இறுதி மூச்சு வரை (சாகும் வரை) சிறையில் இருக்க வேண்டும். இந்த வழக்கில் கோகுல்ராஜ் தாயார் சித்ராவுக்கு பாதிக்கப்பட்டோர் இழப்பீடு சட்டத்தின் கீழ் கூடுதல் இழப்பீடு வழங்க மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு நீதிமன்றம் பரிந்துரை செய்கிறது. இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.
முன்னதாக நீதிமன்றம் அழைத்து வரும்போது யுவராஜ் செய்தியாளர்களிடம் கூறும்போது, தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன் என்றார். தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டதும் யுவராஜ் உட்பட 10 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.
கோகுல்ராஜ் கொலை வழக்கு கடந்து வந்த பாதை
சேலம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். தன்னுடன் படித்த வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுடன் 2015 ஜூன் 23-ம் தேதி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு பேசிக் கொண்டிருந்தார். இரவு வெகு நேரமாகியும் கோகுல்ராஜ் வீடு திரும்பாததால், அவருடைய பெற்றோர் திருச்செங்கோடு போலீஸில் புகார் அளித்தனர்.
விசாரணையில் கோகுல்ராஜை, தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜின் ஆட்கள் கடத்தியது தெரியவந்தது. ஜூன் 24-ம் தேதி பள்ளிப்பாளையம் அருகே தொட்டிப்பாளையம் ரயில்வே தண்டவாளத்தில் தலைதுண்டிக்கப்பட்டு, நாக்கு அறுக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜ் உடல் மீட்கப்பட்டது. கோகுல்ராஜ் உடல் பிரேதப் பரிசோதனை செய்வதற்காக ஈரோடு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது.
கோகுல்ராஜ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், கொலை வழக்காகப் பதிய வேண்டும் என உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் கோகுல்ராஜ் உடல் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு 27-ம் தேதி பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
கொலையாளிகளைக் கைதுசெய்தால்தான் உடலை வாங்குவோம் என உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் 6 பேர் கைது செய்யப்பட்டனர். உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜூலை 2-ல் கோகுல்ராஜ் உடலை பெற்றோர் வாங்கி அடக்கம் செய்தனர்.
இந்தக் கொலை தொடர்பாக யுவராஜ் உட்பட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கோயிலுக்கு வந்த யுவராஜும் அவருடைய ஆட்களும் கோகுல்ராஜை மிரட்டிப் பிடித்துச் சென்ற காட்சி கோயில் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்தது. இது வழக்கின் முக்கிய ஆதாரமானது.
கோகுல்ராஜ் கொலை வழக்கை டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா விசாரித்து வந்தார். வழக்கில் தொடர்புடைய யுவராஜ், அவரது கூட்டாளிகள் 15 பேரும் நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்தனர். யுவராஜ் அவ்வப்போது போலீஸாருக்கு சவால்விட்டு ஆடியோ வெளியிட்டார்.
இந்நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. நூறு நாட்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்த யுவராஜ், 2015 அக் 11-ம் தேதி நாமக்கல் மாவட்ட சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார். 2015 டிச.25-ம் தேதி யுவராஜ் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதே வழக்கில் கைதான தங்கதுரை, அருள்செந்தில், செல்வக்குமார், குமார் (எ)சிவக்குமார், கார் ஓட்டுநர் அருண், சங்கர் ஆகியோரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். ஆனால், இவர்கள் மீதான குண்டர் சட்ட உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
நாமக்கல் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தபோது கோகுல்ராஜ் தோழி உட்பட பலர் பிறழ்சாட்சியாக மாறினர். இதனால், விசாரணையை சேலம் அல்லதுவேறு மாவட்டத்துக்கு மாற்றக்கோரி கோகுல்ராஜ் தாயார் சித்ரா 2019-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இதையடுத்து விசாரணைமதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதோடு சித்ராவின் கோரிக்கையை ஏற்று சிறப்பு அரசு வழக்கறிஞரும் நியமிக்கப்பட்டார்.
மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் 2019 மே 5-ல் தொடங்கிய விசாரணை நிறைவடைந்த நிலையில் யுவராஜ் உட்பட 10 பேர் குற்றவாளிகள், 5 பேர் விடுதலை செய்யப்படுகின்றனர் என நீதிபதிசம்பத்குமார் மார்ச் 5-ல் அறிவித்தார். யுவராஜ் உட்பட 10 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். 7 ஆண்டுகளாக நடந்து வந்த கோகுல்ராஜ் கொலை வழக்கு சிறப்பு (கீழமை) நீதிமன்றத்தில் நேற்றோடு முடிவுக்கு வந்தது.