Published : 07 Mar 2022 11:17 AM
Last Updated : 07 Mar 2022 11:17 AM
சென்னை / மதுரை: தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்கள் விலை ரூ.10 முதல் ரூ.80 வரை இன்று காலை முதல் அதிரடியாக விலை உயர்ந்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு கூடுதலாக 15 சதவீதம் வருவாய் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் செயல்படும் 6,434 டாஸ்மாக் மதுக் கடைகள் மூலம் ஆண்டுதோறும் ரூ.36,752 கோடி வரை வருமானம் கிடைக்கிறது. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், தனியார் மது ஆலைகளில் இருந்து மதுபாட்டில்களை கொள்முதல் செய்து, டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. டாஸ்மாக் வருவாயை அதிகரிக்க தமிழக அரசு மதுபாட்டில்கள் விலையை அதிகரிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்று முதல் மதுபாட்டில்கள் விலை ரூ.10 முதல் ரூ.80 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் குறைவான விலையான ரூ.120-க்கு விற்கப்பட்ட குவாட்டர் மதுபாட்டில் தற்போது ரூ.130-க்கு விற்கப்படுகிறது. மற்ற ரக மது பாட்டில்கள் குவாட்டருக்கு ரூ.20, ஆஃப் மதுபாட்டில்களுக்கு ரூ.40, ஃபுல் மதுபாட்டில்களுக்கு ரூ.80 வரை கூடுதலாக விற்கப்படுகிறது.
இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக டாஸ்மாக் நிறுவனம் அறிவித்து, அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் டாஸ்மாக் பொது மேலாளர்கள் விலை உயர்வு விவரப் பட்டியலை அனுப்பி அறிவுறுத்தியுள்ளனர். அதனால், மதுப்பிரியர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த விலை உயர்வால் டாஸ்மாக் நிறுவனத்தின் வருவாய் 15 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, ஒரு நாளைக்கு ரூ.10.35 கோடி கூடுதல் வருவாயும், ஆண்டுக்கு ரூ.4,396 கோடி கூடுதல் வருவாயும் அரசுக்கு டாஸ்மாக் நிறுவனம் மூலம் கிடைக்கும் என டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று காலை முதல்தான் விலை உயர்வு அதிகரிக்கப்பட்டுள்ளதால், டாஸ்மாக் கடைகளின் விலை உயர்வுக்கு மதுப்பிரியர்களின் எதிர்வினை எந்தளவுக்கு இருக்கிறது என்பது இனிதான் தெரியவரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT