

மேற்கு வங்கத்தில் 2-ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 383 வேட்பாளர்களில் 56 பேர், அதாவது 15 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் எனத் தெரியவந்துள்ளது. இதுபோல் 68 பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதும், இதில் பலர் மீது கொலை, பாலியல் பலாத்காரம் என கடும் குற்ற வழக்குகள் பதிவாகியிருப்பதும் தெரியவந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் 5 மாவட்டங்களில் உள்ள 56 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் வேட்பாளர்கள் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யும் பிரமாண பத்திரத்தில் உள்ள விவரங்களை ‘வெஸ்ட் பெங்கால் எலெக் ஷன் வாட்ச் (டபிள்யு.பி.இ.டபிள்யு)’ என்ற அமைப்பு ஆய்வு செய்து மேற்கண்ட தகவலை வெளியிட் டுள்ளது.
இதன்படி, குற்ற வழக்குகள் கொண்ட வேட்பாளர்களில் அதிக அளவாக பாஜக, ஆளும் திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தலா 13 பேர் உள்ளனர். இதையடுத்து மார்க்சிஸ்ட் கட்சியினர் 11 பேரும், காங்கிரஸ் கட்சியினர் 6 பேரும் உள்ளனர்.
383 வேட்பாளர்களில் 68 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இதில் 59 பேர் கடும் குற்ற வழக்குகள் உள்ளன. 2 ஆண்டுகள் முதல் 16 ஆண்டுகள் வரை இவர்கள் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளன.