

வத்தலகுண்டு அருகேயுள்ள பட்டி வீரன்பட்டி பேரூராட்சி தலைவர் பதவி திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் வேட்பாளராக சியாமளா அறிவிக்கப் பட்டார். ஆனால் சியாமளா வேட்புமனு தாக்கல் செய்ய முயன்றபோது, அவரை முன்மொழிய திமுக கவுன்சிலர்கள் மறுத்துவிட்டனர்.
அதேநேரம் திமுக நகரச் செயலாளர் அருண்குமாரின் மனைவி கல்பனாதேவி வேட்புமனு தாக்கல் செய்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதேபோன்ற நிலை தமிழகம் முழுவதும் பல இடங்களில் நடந்ததையடுத்து திமுக கூட்டணிக் கட்சிகளுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து கூட்டணிக் கட்சிகளுக்கு அறிவிக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்ட திமுகவினர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கட்சித் தலைமை உத்தரவிட்டது. இதையடுத்து பட்டிவீரன்பட்டி பேரூராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கல்பனாதேவி, கட்சித் தலைமையின் உத்தரவை ஏற்று தனது ராஜினாமா கடிதத்தை தேர்தல் நடத்திய அலுவலர் உமாசுந்தரியிடம் நேற்று வழங்கினார்.