

புதுச்சேரி: ”புதுச்சேரியில் பல துறைகளில் நடந்து வரும் ஊழலை பட்டியல் போட்டுக் காட்டலாம். இந்த பட்டியல் இனி வெளிவரும்” என்று அம்மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி காட்டமாக கூறியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று (மார்ச் 5) புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: ‘‘உக்ரைனில் நடைபெறும் பேரில் இந்திய மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இதற்கு மத்திய அரசின் காலம் தாழ்ந்த நடவடிக்கைதான் காரணம். உக்ரைனில் இருந்து வந்த மாணவர்கள் இந்தியாவிலேயே மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்பை மத்திய அரசு உருவாக்க வேண்டும். உக்ரைனில் உள்ள நம்முடைய மாணவர்கள் பாதுகாப்பாக இந்தியா கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்.ஆர். காங்கிரஸ் அரசின் 300 நாள் சாதனை குறித்து ஓர் அமைச்சர் பேசியுள்ளார். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் எந்தவிதமான வளர்ச்சி திட்டமும் நடைபெறவில்லை. ஆனால் இவர் ஆட்சி வந்த 300 நாட்களில் புதுச்சேரியில் பாலாறும், தேனாறும் ஓடுகிறது. அதனை வாரிக் குடிக்க மக்கள் இல்லை என கூறியிருக்கிறார். கடந்த ஆட்சியில் முயற்சியே செய்யாததால்தான் மக்கள் பாதிக்கப்பட்டார்கள் எனவும் கூறியிருக்கிறார். அந்த அமைச்சர்தான் கடந்த ஆட்சியில் முதல்வரின் நாடாளுமன்ற செயலராக இருந்தார். அவர்தான் அப்போதைய ஆளுநருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
தற்போது அமைச்சராக உள்ள அவர், இந்த ஆட்சியில் மக்களுக்கு அறிவித்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி விட்டோம். சென்டாக் நிதியை முழுமையாக கொடுத்துள்ளோம் என கூறுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சியிலும் சென்டாக் நிதியை முழுமையாக கொடுத்துள்ளோம். இது ஒன்றும் புதிதல்ல.
பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஊதியம், மீனவர்களுக்கு ரூ.500 உதவித்தொகை உயர்த்தி கொடுத்ததை தவிர இவர்களுடைய சாதனை எதுவும் கிடையாது. யார் சாதனை செய்தார்கள் என்று மேடை போட்டு பேச நாங்கள் தயாராக உள்ளோம். இவர்களால் மத்திய அரசிடமிருந்து அதிகமாக நிதி பெற முடிந்ததா? சட்டப்பேரவை கட்ட ரூ.300 கோடிக்கு யார் அனுமதி கொடுத்தது. இதுவும் ஒரு பொய்யான தகவல்தான். அந்த அமைச்சர் கூறிய 300 நாள் சாதனையில் 90 சதவீதம் எங்களுடையதுதான். மத்திய அரசிடமிருந்து ரூ.300 கோடி வெள்ள நிவாரணம் கேட்டார்கள். ஆனால், வந்தது ரூ.13.5 கோடிதான். இதுவும் பேரிடர் துறைக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதிதான். புதிதாக நிதி எதுவும் மத்திய அரசு கொடுக்கவில்லை. இவர்கள் கேட்ட ரூ.300 கோடியை மத்திய அரசு கொடுத்ததா? அதுமட்டுமல்லாமல் மத்திய அரசிடமிருந்து கூடுதலாக ரூ.2 ஆயிரம் கோடி கேட்டதாக கூறினார்கள். அதில் 2 கோடியை கூட வாங்க முடியாது.
பாஜக ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரியை பெஸ்ட் மாநிலமாக மாற்றுவோம் என்று பிரதமர் கூறினார். ஆனால் இப்போது வொர்ஸ்ட் மாநிலமாகதான் மாறியிருக்கிறது. புதுச்சேரியில் இவர்கள் ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் ஆகிறது. ஆனால், முதல்வர் ஒரு முறையாவது டெல்லி சென்று பிரதமரை பார்த்தாரா? ஒட்டுமொத்தமாக இந்த ஆட்சியில் சாதனைகளை தவிர வேதனைகள்தான் அதிகம். முதல்வர் மற்றும் அமைச்சர்களின் அலுவலகங்களில் புரோக்கர்கள் அதிகமாக உள்ளார்கள். இது ஒரு ஊழல் நிறைந்த ஆட்சியாக உள்ளது. கலால், பொதுப்பணி துறைகளில் ஊழல், மருந்து வாங்க அனுமதி கொடுப்பதில் ஊழல், வேலைவாய்ப்பில் ஊழல். இப்படி ஊழலை பட்டியல் போட்டு காட்டலாம். இதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. இந்தப் பட்டியல் இனிமேல் வெளிவரும்.
எங்களுடைய ஆட்சியில் 10.8 சதவீதமாக வளர்ச்சி இருந்தது. ஆனால், தற்போது 6 சதவீதமாகதான் உள்ளது. இது ஒரு சாதனையா? ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.1,200 கோடி ஜூன் மாத்துக்கு பிறகு கிடைக்காது. அதற்காக என்ன செய்ய போகிறீர்கள்? காங்கிரஸ் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு கட்டுக்குள் இருந்தது. ஆனால், இப்போது காவல்நிலையங்களில் போலீஸார் பஞ்சாயத்து செய்கிறார்கள். இதுபோன்ற அவலமான நிலை உள்ளது” என்று நாராயணசாமி கூறினார்.
இந்தப் பேட்டியின்போது காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் உடனிருந்தார்.