

சென்னை: திரைப்பட இயக்குநர் சுசி கணேசன் தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி கவிஞர் லீனா மணிமேகலை தாக்கல் செய்த வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கவிஞர் லீனா மணிமேகலை தனது ட்விட்டர் பக்கத்தில், திரைப்பட இயக்குநர் சுசி கணேசனுக்கு எதிராக " மீ டு" புகாரை தெரிவித்ததைத் தொடர்ந்து, சென்னை சைதாப்பேட்டை மாஜிஸ்திட்ரேட் நீதிமன்றத்தில் இயக்குனர் சுசி கணேசன், லீனா மணிமேகலைக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில், தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் எந்த ஓர் அடிப்படை ஆதாரமுமின்றி பொய்யான புகாரை லீனா மணிமேகலை பதிவிட்டுள்ளார். சுய விளம்பரத்திற்காக லீனா மணிமேகலை இது போல ஒரு தகவலை பரப்பியுள்ளார். எனவே, இந்திய தண்டனை சட்டத்தின் அவதூறு பிரிவின்கீழ் அவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை சைதாப்பேட்டை 9-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணையின்போது, லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட்டை முடக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து லீனா மணிமேகலை தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பாஸ்போர்ட் முடக்கத்தை நீக்கி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சுசி கணேசன், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 4 மாதங்களுக்குள் சைதாப்பேட்டை நீதிமன்றம் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் சைதாப்பேட்டை 9-வது மாஜிஸ்திரேட் மோகனாம்பாள் இந்த வழக்கை விசாரிக்க கூடாது, வழக்கை வேறு மாஜிஸ்திரேட் விசாரிக்க உத்தரவிடவேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லீனா மணிமேகலை வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது, இயக்குனர் சுசி கணேசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அலெக்சிஸ் சுதாகர், கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு விசாரணை இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கை மேலும் தாமதப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற வழக்கை மனுதாரர் தொடர்ந்துள்ளார். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும். மேலும் உச்ச நீதிமன்றம் அவதூறு வழக்கை 4 மாதத்திற்குள் முடிக்கவேண்டும் என்று கெடு விதித்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த, முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, லீனா மணிமேகலை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மாஜிஸ்திரேட்க்கு எதிராக கூறி வழக்கை வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்றவேண்டும் என்று கூறியுள்ளதாக கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.