

சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்காக சென்னை மாநகராட்சி பகுதியில் ஒட்டப்பட்ட 3,705 சுவரொட்டிகள் அகற்றப்பட்டு, அதற்கான செலவுத் தொகையாக 2 லட்சத்து 67 ஆயிரம் ரூபாயை சம்பந்தப்பட்ட வேட்பாளர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காக சென்னை மாநகராட்சி 117-வது வார்டில் பிரச்சாரத்துக்காக ஒட்டப்பட்ட தனது சுவரொட்டி மீது திமுகவினர் சுவரொட்டி ஒட்டியுள்ளதாக கூறி, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி அதிமுக வேட்பாளர் ஆறுமுகம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத் சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, தேர்தலுக்கான விதிகளை மீறி போஸ்டர் ஒட்டியவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஏற்கெனவே ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை அகற்றி, அதற்கான செலவை சம்பந்தப்பட்ட வேட்பாளரிடம் வசூலிக்கவும் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை மாநகராட்சி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டன. அதில் பிப். 17 முதல் பிப்.19ம் தேதி வரை 3,705 சுவரொட்டிகள் அகற்றப்பட்டு, அதற்கான செலவுத் தொகையாக 2 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மீதமுள்ள சுவரொட்டிகளையும் ஒரு வாரத்தில் அகற்றி, சம்பந்தப்பட்ட வேட்பாளர்களிடமிருந்து அதற்கான செலவை வசூலிக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.