

தஞ்சாவூர்: தஞ்சாவூரின் மையப் பகுதியில் உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டதாக கூறி, 148 ஆண்டுகள் பழமையான தஞ்சாவூர் யூனியன் கிளப்புக்கு, வருவாய்த் துறையினர் இன்று காலை சீல் வைத்தனர்.
தஞ்சாவூரில் 1872-ம் ஆண்டு வாசகசாலை மற்றும் நூலகம், நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தொடங்கப்பட்டது. பின்னர் பழைய பேருந்து நிலையம் அருகே கோட்டை மதில் சுவர் இடிக்கப்பட்டு, அதிலிருந்த செம்புரான் கற்களை கொண்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டு 1874-ம் ஆண்டு அப்போதைய மாவட்ட நீதிபதி பர்னர் ஆர்தர் கோக் என்பவரால் திறந்து வைக்கப்பட்டது. இதையடுத்து 1892-ம் ஆண்டு இந்தக் கட்டிடத்துக்கு தஞ்சாவூர் யூனியன் கிளப் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்த கிளப்பில் ஹாவ்லேக் என்ற பெயரில் ஆங்கில நூலகமும், பாவேந்தர் பெயரில் 5 ஆயிரம் புத்தகங்கள் அடங்கிய தமிழ் நூலகமும், டென்னிஸ் கிளப்பும் இயங்கியன. 1919-ம் ஆண்டு பிப்.12-ம் தேதி தஞ்சாவூருக்கு வருகை தந்த ரவீந்திரநாத் தாகூர், இந்த யூனியன் கிளப்புக்கு வருகை தந்து உரையாற்றியுள்ளார். அதேபோல் அண்ணா, பாரதிதாசன் உள்ளிட்ட தலைவர்களும் வந்து சென்றுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே இருந்த பழமையான கட்டிடங்களான ஜூபிடர் திரையரங்கம், காவேரி லாட்ஜ், தஞ்சாவூர் யூனியன் கிளப், சுதர்சன சபா ஆகியவற்றின் கட்டிடங்களை நேரில் ஆய்வு செய்து, குத்தகை காலங்கள் தொடர்பான ஆவணங்களை மாநகராட்சி நிர்வாகம் பரிசீலனை செய்தது. இதில் 99 ஆண்டுகள் குத்தகை காலம் முடிவடைந்ததாக கூறி ஜூபிடர் திரையரங்கம், காவேரி லாட்ஜ், தஞ்சாவூர் யூனியன் கிளப் ஆகியவற்றின் இடங்களை மாநகராட்சி நிர்வாகம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தண்டாரோ மூலம் அறிவித்து இடங்களை கையகப்படுத்துவதாக நோட்டீஸ் ஒட்டியது. இதில் தஞ்சாவூர் யூனியன் கிளப் நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் தஞ்சாவூர் மாநகராட்சியை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக தஞ்சாவூர் வட்டாட்சியர் மணிகண்டன், தமிழ்நாடு பொது இடங்களில் கேளிக்கை சட்டம் 1888-ன்படி, தஞ்சாவூர் யூனியன் கிளப் பதிவு செய்துள்ளதா, அப்படி பதிவு செய்து அதற்கான உரிமம் இருந்தால் பிப்.25-ம் தேதிக்குள் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
இதற்கு யூனியன் கிளப் நிர்வாகம், 148 ஆண்டுகள் பழமையான இந்த நிர்வாகத்தில் அதுபோன்று உரிமம் ஏதும் பெறவில்லை என எழுத்துபூர்வமாக பதில் அளித்தனர். இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மேற்பார்வையில் இன்று காலை மாவட்ட கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா, கோட்டாட்சியர் ரஞ்சித், வட்டாட்சியர் மணிகண்டன், மாகராட்சி ஆணையர் சரவணக்குமார் ஆகியோர், தஞ்சாவூர் யூனியன் கிளப் கட்டிடத்துக்கு உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருவதாக கூறி சீல் வைத்தனர்.
நூலகத்தை பாதுகாக்க பொதுமக்கள் கோரிக்கை:
பழமையான தஞ்சாவூர் யூனியன் கிளப் கட்டிடம் வலுவாக உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான தமிழ், ஆங்கில நூல்கள் உள்ளது. முதலில் நூலகமாக தொடங்கப்பட்ட இந்த கட்டிடத்தில் காலப்போக்கில் டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகள் நடைபெற்றுள்ளது.
இந்தக் கட்டிடத்துக்கு ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்ட தலைவர்கள் வந்து சென்றுள்ளதால், இதனை பாதுகாத்து, இந்த நூலகத்தை செம்மைப்படுத்தும் வகையில் தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நலப்பேரவையின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் வெ.ஜீவக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.