

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு முதன்முறையாக வெற்றி பெற்றவர் செ.அரங்கநாயகம். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். சில நாட்கள் திமுகவில் இருந்தார். தற்போது எந்த கட்சியையும் சாராமல் இருக்கும் அவர் ஜனநாயக திருவிழா குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
கோவை மேற்கு தொகுதிக்கு 1974-ல் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட வேட்பாளரை அறிவிச்சு இருந்தாங்க. அவரோட அறிமுக கூட்டத்தில கலந்துக்க வந்த தலைவரிடம் (எம்ஜிஆர்), கட்சிக்காரர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் (கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் லீக்) வேட்பாளர் பலமானவரா இல்லைன்னு சொன்னாங்க. உடனே, வேட்பாளரை மாத்தி என்னை வேட்பாளரா அறிவிச்சார் தலைவர். அப்ப நடந்த மக்களவைத் தேர்தலில் எங்க ஆதரவோட கம்யூனிஸ்ட் கட்சி சார்பில பார்வதி கிருஷ்ணன் போட்டியிட்டார்.
அப்ப எல்லாம் தேர்தலுக்காக சில பேர் கிட்ட நன்கொடை வசூல் செய்வோம். அதில வர்ற பணத்திலே போஸ்டர் ஒட்டறது, சுவரில் எழுதறது, கூட்டம் நடத்தறதுன்னு வேலைகளை செய்வோம். அதோட வீடு, வீடா போய் வாக்கு கேட்க மட்டும்தான் முடிஞ்சுது.
அந்த தேர்தல்ல காமராஜ் காங்கிரஸூம், இந்திரா காங்கிரஸூம் ஒண்ணா இணைஞ்சு நின்னாங்க. காமராஜ் 10 நாள் கோவையில் தங்கி வேலை செய்தார். தலைவர் (எம்ஜிஆர்) வீதி, வீதியா என்னை கூப்பிட்டுகிட்டு போய் வாக்கு கேட்டார். நான் வெற்றி பெற்றேன்.
அடுத்ததா 1977-ல் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடந்துச்சு. மக்கள் மத்தியிலே செல்வாக்கு உள்ளவங்களை தேர்வு செய்து வேட்பாளருக்கான பட்டியலை தலைவரிடம் கொடுத்தேன்.
வேட்பாளரை முடிவு பண்ண றதுக்கு முன்னால் என்கிட்ட அபிப்ராயம் கேட்டார் தலைவர். ஆனா, ஒருபோதும் ஜாதி அடிப்படையிலே வேட்பாளரை தலைவர் நிர்ணயம் பண்ணியதில்லை. அந்த தேர்தலில் நான் மட்டுமல்லாது, பெருவாரியான இடங்களில் எங்க கட்சி (அதிமுக) ஜெயிச்சது. நான் ஜெயிச்சு கல்வி அமைச்சரா பொறுப்பேற்றேன்.
இப்ப எல்லாம் தப்பு செய்யற முதல்வர்கள் பதவி இழக்கின்றனர். ஆனா, நான் என்ன தப்பு செஞ்சேன்னு கேட்டு பிரச்சாரம் பண்ணியது தலைவர் மட்டும்தான். இந்த தேர்தலில் தலைவர் முதல்வர் ஆனார்; நானும் மந்திரியானேன்.
அப்பவெல்லாம் தேர்தல்னா திருவிழா மாதிரி இருக்கும். இப்ப மாதிரி தேர்தல் கமிஷன் நெருக்கடி இருக்காது. எனக்கு தெரிஞ்சு, 1991-க்கு அப்பறம்தான் வாக்குக்கு பணம் கொடுப்பது விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஜனநாயகத்தால் அனைவரும் பலன் பெற வேண்டுமானால், தேர்தல் செலவை அரசே ஏற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.