உக்ரைனில் புதுச்சேரி மாணவர்கள் பத்திரமாக இருக்கின்றனர்: முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி | கோப்புப்படம்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி | கோப்புப்படம்.
Updated on
1 min read

புதுச்சேரி: உக்ரைனில் புதுச்சேரி மாணவர்கள் பத்திரமாக இருக்கின்றனர். அவர்களை அழைத்து வருவதற்கான முழு செலவையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து போடும் சிறப்பு முகாமை முதல்வர் ரங்கசாமி இன்று(பிப்.27) கதிர்காமத்தில் உள்ள தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப்பள்ளியில் தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர், முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: "புதுச்சேரியில் ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் 86 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்படுகிறது. புதுச்சேரியில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சுகாதாரத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

அரசுப் பொது மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி, அரசு பல் மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வும் விரைவில் நடத்தப்பட உள்ளது. நம்முடைய நிர்வாகத்தில் பதவி உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறையில் செவிலியர்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. எங்களுடைய அரசு சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பொதுப்பணித்துறையில் பணிபுரியும் வவுச்சர் ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஊதியம் இந்த மாதம் முதல் வழங்கப்படும்.

உக்ரைனில் உள்ள புதுச்சேரி மாணவர்களை பத்திரமாக மீட்டு வர புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவர்களை அழைத்து வருவதற்கான முழு செலவையும் புதுச்சேரி அரசே ஏற்றுக்கொள்ளும். பிள்ளைகள் பாத்திரமாக இருக்கிறார்கள். அவர்களை தொடர்பு கொள்வதற்கான நடவடிக்கையும் எடுத்துள்ளோம். மாணவர்களை பத்திரமாக மீட்க வேண்டும் என பிரதமருக்கும், வெளியுறுவுத்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளோம். புதுச்சேரி பட்ஜெட்டுக்கு போதுமான நிதியை மத்திய அரசு அளிக்கும்." இவ்வாறு முதல்வர் ரங்கசாமி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in