Published : 30 Apr 2016 07:31 PM
Last Updated : 30 Apr 2016 07:31 PM

29 ஆண்டுகளாக கைக்குள் வைத்திருந்த அறந்தாங்கியில் மகனை களமிறக்கி திருநாவுக்கரசர் தீவிரம்

அறந்தாங்கி தொகுதியில் கடந்தமுறை முதன் முறையாக காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கிய திருநாவுக்கரசர், இம்முறை தனது மகன் எஸ்.டி.ராமச்சந்திரனுக்காக தொகுதியை கேட்டு வாங்கி இருக்கிறார்.

28 வயதில் 1977-ல் முதன்முதலில் அறந்தாங்கியில் களமிறங்கினார் திருநாவுக்கரசர். அப்போது, புதுக்கோட்டை மாவட்டத்தின் எஞ்சிய நான்கு தொகுதிகளில் பிரச்சாரம் செய்த எம்.ஜி.ஆரால் அறந்தாங்கிக்கு மட்டும் வரமுடியவில்லை. ஆனால், எம்.ஜி.ஆர். பிரச்சாரம் செய்த நான்கு தொகுதிகளிலும் அதிமுக தோற்று, அறந்தாங்கியில் மட்டும் வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்காக திருநாவுக்கரசரை துணை சபாநாயகர் ஆக்கினார் எம்.ஜி.ஆர். அடுத்த தேர்தலிலும் அறந்தாங்கியை வென்று கூட்டுறவு மற்றும் தொழில் துறை அமைச்சரானார். அதிலிருந்தே தொடர் வெற்றிகளை குவித்து வந்த அரசர், 1989-ல் ஜெ அணியில் நின்றும் 1991-ல் தனிக் கட்சி தொடங்கியும் வெற்றி பெற்றார். 1996-வரை அறந்தாங்கி தொகுதியில் வெற்றி வாகை சூடிய திருநாவுக்கரசர், 1999-ல் பாஜக - திமுக கூட்டணியில் புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு மத்திய அமைச்சரும் ஆனார். 2000-ல் நடந்த இடைத் தேர்தலிலும் 2001-ல் நடந்த பொதுத் தேர்தலிலும் அறந்தாங்கியில் திருநாவுக்கரசரால் நிறுத்தப்பட்ட அன்பரசனும், அரசனும் வென்றார்கள்.

இந்த நிலையில், 2002-ல் தனது எம்.ஜி.ஆர். அதிமுக கட்சியை பாஜக-வில் இணைத்தார் அரசர். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வோடு கூட்டணி வைத்த ஜெயலலிதா, திருநாவுக்கரசருக்கு தொகுதி கிடைக்கக்கூடாது என்பதற்காகவே புதுக்கோட்டையை அதிமுக-வுக்கு பிடிவாதமாக கேட்டு வாங்கினார். அந்த வருத்தத்தைப் போக்க அவரை மத்திய பிரதேசம் வழியாக ராஜ்ய சபாவுக்கு அனுப்பியது பாஜக. அதே சமயம், 2006 சட்டமன்றத் தேர்தலில் திருநாவுக்கரசரால் அறந்தாங்கியில் நிறுத்தப்பட்ட காத்த முத்துவை திமுக வேட்பாளர் உதயம் சண்முகம் தோற்கடித்தார். தொடர்ச்சியாக 29 ஆண்டுகள் தொகுதியை கைக்குள் வைத்திருந்த திருநாவுக்கரசருக்கு அறந்தாங்கி தந்த முதல் தோல்வி இது.

இதையடுத்து, 2009 நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரத்தில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தோற்றார். அதற்குமேல் அங்கு தாக்குப்பிடிக்க முடியாமல் காங்கிரஸில் இணைந்தவர், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட்டு அதிமுக-வின் புதுமுக வேட்பாளர் ராஜ நாயகத்திடம் தோற்றார்.

இந்தத் தேர்தலில் மகன் ராமச்சந்திரனை நிறுத்தி இருக்கிறார். ஆனால், ஒரு காலத்தில் திருநாவுக்கரசரின் கோட்டையாக இந்த அறந்தாங்கி இப்போது அப்படி இல்லை. அடிக்கடி கட்சி மாறியது அரசரின் அரசியல் இமேஜை சரித்திருக்கும் அதேநேரம், இளம் வாக்காளர்கள் மத்தியில் இவரைப் பற்றிய அறிமுகம் இல்லை. கடந்த முறையே தொகுதி தனக்கு கிடைக்காத புழுக்கத்தில் இருந்த திமுக முன்னாள் எம்.எல்.ஏ. உதயம் சண்முகம் இப்போதும் அதே மனநிலையில் இருக்கிறார். ஆனாலும், மகனின் வெற்றியை தன் மானப் பிரச்சினையாக கருதி களத்துக்கு வந்தி ருக்கிறார் திருநாவுக்கரசர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x