

கோவில்பட்டி: கோவில்பட்டி ராஜீவ் நகரைச்சேர்ந்தவர் பிரபாகரன். இவர், கோவில்பட்டி அருகே துறையூரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் கட்டிடம் இடிந்ததில், அங்குபணியாற்றிய ராமர் (67), ஜெயராஜ்(43), தங்கவேல்(50), கண்ணன் என்ற மாடமுத்து (49) ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.
பேச்சுவார்த்தை
உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் மற்றும் பட்டாசு ஆலை நிர்வாகத்தினர் பங்கேற்ற பேச்சுவார்த்தை, கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.6 லட்சம்நிவாரணம், இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்கு ரூ.50 ஆயிரம் வழங்கவும், அவர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாகவும் பட்டாசு ஆலை நிர்வாகம் சார்பில்உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து,
உயிரிழந்த 4 தொழிலாளர்களின் உடல்கள் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
வெடி விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் பிரபாகரன், மேலாளர் சீனிவாசன், மேற்பார்வையாளர்கள் திருநாவுக்கரசு, சூசை மிக்கேல் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
தமிழக அரசு நிவாரண நிதி
தூத்துக்குடி பட்டாசுத் தொழிற்சாலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துஉள்ளார்.
‘பட்டாசு விபத்தில் 4 பேர் உயிர்இழந்த செய்தி அறிந்து வேதனைஅடைந்தேன். இந்த விபத்தில் உயிர்இழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இந்த விபத்தில் உயிர்இழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்' என்று செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.