Published : 24 Feb 2022 05:39 AM
Last Updated : 24 Feb 2022 05:39 AM
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19-ம் தேதி நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மொத்தமுள்ள 21 மாநகராட்சி களையும் திமுக கைப்பற்றியது. அத்துடன் 132 நகராட்சிகள், 435 பேரூராட்சிகளையும் திமுக தன் வசமாக்கியுள்ளது.
தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகிக் கொண்டிருந்த போதே சென்னை மாநகராட்சியில் வெற்றி பெற்ற பலர் அண்ணா அறிவாலயத்துக்கு வந்தனர். திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்களும் திரண்டனர். அன்று மாலை அறிவாலயத்துக்கு வந்த திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், அங்கிருந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியான நிலையில், வெற்றி பெற்ற திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் நேற்று அண்ணா அறிவாலயத்தில் குவிந்தனர். மாவட்ட வாரியாக முதல்வரை சந்திக்க காத்திருந்தனர்.
சென்னை சித்தாலப்பாக்கத்தில் நடந்த சுகாதாரத்துறை நிகழ்வில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், காலை11.30 மணிக்கு அறிவாலயம் வந்தார். அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கில் வெற்றி வேட்பாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. முதலில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதிமாறன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, மாவட்ட வாரியாக வெற்றி பெற்றவர்கள் முதல்வரிடம் தங்கள் வெற்றிச் சான்றிதழை காட்டி வாழ்த்து பெற்றனர். அப்போது, முதல்வர் ஒவ்வொருவருக்கும் பாராட்டு தெரிவித்து அனுப்பினார். காலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெற்றி பெற்றவர்கள் முதல்வரை சந்தித்தனர். மாலையில், திருவண்ணாமலை உள்ளிட்ட இதர மாவட்டங்களில் வெற்றி பெற்றவர்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதனிடையே, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு மற்றும் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரி வித்தனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தனது கட்சி சார்பில் வெற்றி பெற்றவர்களுடன் முதல்வரை சந்தித்தார். அப்போது வெற்றி வேட்பாளர்களை முதல்வருக்கு அறிமுகம் செய்து வைத்தார். வெற்றி பெற்றவர்களின் வருகையால் அண்ணா அறிவாலய வளாகம் விழாக்கோலம் பூண்டிருந்தது.
மறைமுக தேர்தல்
மாநகராட்சிகளில் மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மார்ச் 4-ம் தேதி நடக்கும் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் உள்ள முக்கிய நிர்வாகிகளிடம் இருந்து திமுக தலைமை பட்டியல்களை பெற்றுள்ளது. இதுதவிர காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும் தலைவர் பதவிகள் குறித்த கோரிக்கைகள் திமுக தலைமையிடம் வைக்கப்பட்டுள்ளன. இவை விரைவில் பரிசீலிக்கப்பட்டு ஓரிரு நாட்களில் மேயர், நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவர் பதவிகளுக்கான பெயர்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கு நேரடி தேர்தல் முறை இருந்தது. மேயர் ஒரு கட்சியை சேர்ந்தவராகவும் மன்ற உறுப்பினர்கள் மற்ற கட்சியை சேர்ந்தவர்களாகவும் இருக்கும் சூழல் ஏற்படும்போது நிர்வாகம் பாதிக்கப்படுவதாகவும், கூட்டங்கள் நடத்துவதே சிக்கலாகும் என சுட்டிக் காட்டிய அப்போதைய அரசு, மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை பிறப்பித்தது. அதன்படியே, இப்போதும் மறைமுக தேர்தல் மூலம் மேயர், நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT