

பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஈரோடு மாநகராட்சி மேயர் பதவியைக் கைப்பற்ற திமுக பெண் கவுன்சிலர்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. மாவட்ட அமைச்சர், கட்சித்தலைமையின் ஆசி யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
திமுக ஆட்சிக்காலத்தில் (2006-11) ஈரோடு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. கடந்த 6 ஆண்டுகளாகத் தேர்தல் நடக்காத நிலையில், தற்போது நடந்த ஈரோடு மாநகராட்சித் தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றுள்ளது.
ஈரோடு மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில், திமுக 43 வார்டுகளிலும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 3 இடங்களிலும், மதிமுக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 6 இடங்களிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
ஈரோடு மேயர் பதவி இம்முறையும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், மேயர் பதவி யாருக்குக் கிடைக்கும் என்பதில் பெண் கவுன்சிலர்களிடையே போட்டி நிலவுகிறது. இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறியதாவது:
ஈரோடு மாநகராட்சியில் 29-வது வார்டில் வெற்றி பெற்றுள்ள, திமுக மாவட்டத் துணைச் செயலாளர் பதவி வகிக்கும் செல்லப்பொன்னிக்கு மேயராகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இவரது தந்தை அரங்கராசன், ஈரோடு நகராட்சித் தலைவராக இரு முறை பதவி வகித்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு திமுக சார்பில் மேயர் வேட்பாளருக்கு போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். கட்சி நடத்தும் போராட்டங்கள், நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்கிறார்.
அடுத்ததாக, ஈரோடு மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியத்தின் மனைவி நாகரத்தினம், 50-வது வார்டில் வெற்றி பெற்றுள்ளார். மாநகர செயலாளர் அமைச்சர் முத்துசாமிக்கு நெருக்கமாக இருந்து வருவதால், இவருக்கு மேயர் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு உள்ளது. ஆனால், நாகரத்தினம் கட்சியில் பொறுப்பு ஏதும் வகித்ததில்லை என்பதோடு, கட்சிப்பணிகளிலும் ஈடுபட்டதில்லை என்பது பலவீனமாக உள்ளது
இதேபோல், கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் மணிராசுவின் மனைவி கோகிலவாணியும் மேயர் பதவி பந்தயத்தில் உள்ளார். இவர் 49-வது வார்டில் வெற்றி பெற்றுள்ளார். கட்சி நிர்வாகி திண்டல் குமாரசாமியின் மருமகள் கீர்த்தனா என்பவரும், மாற்று சமுதாயத்தை சேர்ந்தவருக்கு வாய்ப்பு என்ற அடிப்படையில் மேனகா நடேசனும் மேயர் பதவிக் கான பரிசீலனையில் உள்ளார்.
மாவட்டச் செயலாளர் மற்றும் அமைச்சரின் பரிந்துரை யாருக்கு இருக்கிறது என்பதைப் பொறுத்தே, கட்சித் தலைமை மேயர் வேட்பாளரை அறிவிக்கும் என்றனர்.