

ஈரோடு: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கோட்டையாக கருத்தப்பட்ட கோபி நகராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. நகராட்சியில் மொத்தமுள்ள வாக்காளர்களான 48 ஆயிரத்து 247 வாக்காளர்களில், 35 ஆயிரத்து 141 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவு செய்தனர். கோபி நகராட்சியில் கடந்த 1996-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நல்லசாமி தலைவராகவும், 2001ம் ஆண்டு, அதிமுகவை சேர்ந்த கந்தவேல்முருகனும், 2006 மற்று 2011ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் அதிமுகவை சேர்ந்த ரேவதி தேவியும் தலைவர் பதவியை வகித்து உள்ளனர். கடந்த 2006 மற்றும் 2011ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக 23 வார்டுகளை கைப்பற்றி தலைவர் பதவியைக் கைப்பற்றியுள்ளது.
கோபி நகராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக தலைவர் பதவி அதிமுக வசமே இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், நான்காவது முறையாக அதிமுக தலைவர் பதவியைத் தொடர வேண்டுமானால் அதிக வார்டுகளில் அதிமுக கவுன்சிலர்கள் வெற்றி பெற வேண்டிய நிலை இருந்தது.
இந்த நிலையில், தற்போது நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 30 வார்டுகளில், திமுக 14 வார்டுகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றதன் மூலம், கோபி நகராட்சி திமுக வசமாகியுள்ளது. அதிமுக 13 வார்டுகளிலும், சுயேச்சை ஒரு வார்டிலும் இங்கு வெற்றி பெற்றுள்ளனர். இதன்மூலம் திமுக கூட்டணி கோபி நகராட்சியை கைப்பற்றியுள்ளது.
தேர்தல் வெற்றி குறித்து திமுக வட்டாரங்கள் கூறியது: "அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனின் கோபி தொகுதி, அதிமுகவின் கோட்டையாக இதுவரை இருந்து வந்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலின்போதும், தேர்தலுக்கு பிறகும் செங்கோட்டையனின் சகோதரர் காளியப்பன், அவரது மகன் செல்வம், செங்கோட்டையனுடன் மிக நெருக்கமாக இருந்த சிந்து ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர்.
இந்த மாற்றங்களுக்குப் பிறகு, நடந்த கோபி நகராட்சித் தேர்தலில், தலைவர் பதவியைக் கைப்பற்றுவதை திமுகவிற்கு கவுரவப் பிரச்சினையாக எடுத்து, உறுப்பினர்கள் தேர்தல்பணி ஆற்றினர். இதனால் அதிமுகவின் கோட்டை தற்போது தகர்ந்துள்ளது என தெரிவித்தனர். இதேபோல், முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் தலைவராக முன்பு பதவி வகித்த பவானி நகராட்சியிலும் இம்முறை திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது” என்றனர்.