மகசூல் அதிகரிப்பால் புதினா விலை குறைவு: சூளகிரி பகுதி விவசாயிகள் வேதனை

சூளகிரி பகுதியில் உள்ள விளை நிலத்தில் செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ள புதினா செடிகள்.
சூளகிரி பகுதியில் உள்ள விளை நிலத்தில் செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ள புதினா செடிகள்.
Updated on
1 min read

சூளகிரி பகுதியில் புதினா மகசூல் அதிகரித்துள்ள நிலையில், விலை குறைந்துள்ளதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, ஓட்டர்பாளையம் சிம்பலதிராட்டி, மாரண்டப்பள்ளி, அத்திமுகம், சீபம், கீரனப்பள்ளி, உத்தனப்பள்ளி, திம்மசந்திரம், குடிசாதனப்பள்ளி உள்ளிட்ட பகுதியில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு மேல் விவசாயிகள் புதினா சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு சாகுபடி செய்யப்படும் புதினா, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், ஓசூர் சந்தை வழியாக கர்நாடக, ஆந்திர மாநிலங்களுக்கும், கோயம்புத்தூர் சந்தை மூலம் கேரள மாநிலத்துக்கும், சூளகிரியில் இருந்து நேரிடையாக புதுச் சேரிக்கும் புதினா அதிக அளவில் தினசரி வியாபாரிகள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புதினா ஒரு கட்டு ரூ.40-க்கு விற்பனையானது. தற் போது, மகசூல் அதிகரித்துள்ள நிலையில் ஒரு கட்டு ரூ.6-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக சூளகிரியைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன் மற்றும் சிலர் கூறியதாவது:

சூளகிரி பகுதியில் தக்காளி, புதினா மற்றும் பல்வேறு ரக கீரை வகைகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக புதினா சாகுபடியில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சூளகிரி சந்தையில் 100 கட்டுகள் கொண்ட ஒரு மூட்டை புதினா ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனையானது.

கடந்தாண்டு சூளகிரி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், கர்நாடக, ஆந்திர மாநிலத்தில் நல்ல மழை பெய்த தால், விவசாயிகள் புதினா சாகு படியில் அதிக ஆர்வம் காட்டினர். இந்நிலையில், புதினா மகசூல் அதிகரித்துள்ளது. சந்தைக்கு தேவைக்கு அதிகமாக புதினா விற்பனைக்கு செல்வதால் விலை குறைந்துள்ளது.தற்போது, ஒரு கட்டு ரூ.6-க்கும், 100 கட்டுகள் கொண்ட ஒரு மூட்டை ரூ.500 முதல் ரூ.600-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதனால், விவசாயிகளுக்கு போதிய வருவாய் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in