திமுகவில் வாரிசுகள் ஆணவத்துடன் செயல்படுகின்றனர் - வாக்களித்த பின் கே.பி.முனுசாமி பேட்டி

திமுகவில் வாரிசுகள் ஆணவத்துடன் செயல்படுகின்றனர் - வாக்களித்த பின் கே.பி.முனுசாமி பேட்டி
Updated on
1 min read

கிருஷ்ணகிரி: "திமுகவினரின் ஆணவப் பேச்சுக்கு மக்கள் தங்களது வாக்குகள் மூலம் தீர்ப்பு அளிப்பார்கள்” என காவேரிப்பட்டணத்தில் வாக்களித்த பின் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி மற்றும் காவேரிப்பட்டினம், நாகரசம்பட்டி, பர்கூர், ஊத்தங்கரை, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை ஆகிய 6 பேரூராட்சிகளில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காவேரிப்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட 10-வது வார்டில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தனது குடும்பத்தினருடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குப் பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “திமுக ஆட்சியை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை உள்ளதால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். மக்கள் திமுகவின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தனர்; ஆனால், திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எந்தவித உள்கட்டமைப்புகளை செய்யப்படவில்லை. சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. இப்படி எல்லா வகையிலும் முதல்வர் ஸ்டாலின் தோல்விகண்டுள்ளார்.

திமுகவினர் அரசு இயந்திரங்களை தன் கட்சியினரை போல் பயன்படுத்துகின்றனர். இது தொடர்பாக அமைதியான முறையில் நேர்மையாக புகார் அளித்தால் குண்டர்களை வைத்து அதிமுகவினரை தாக்குகின்றனர். காவல்துறையினர் நாங்கள் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் எங்கள் மீது தாக்குதல் நடத்திய அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கின்றனர்.

திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களும் வாரிசுகளும் ஆணவத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் அவர்களின் ஆணவப் பேச்சுக்கு மக்கள் தங்களது வாக்குகள் மூலம் நல்ல தீர்ப்பு அளிப்பார்கள்” என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in