Published : 15 Apr 2016 05:04 PM
Last Updated : 15 Apr 2016 05:04 PM

ஆற்காட்டை கொடுத்து சோளிங்கரை பெற்ற காங்கிரஸ்

முன்னாள் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம் போட்டியிடுவதற்கு வசதியாக ஆற்காடு தொகுதியை திமுகவினருக்கு விட்டுக் கொடுத்து சோளிங்கர் தொகுதியை காங்கிரஸ் கட்சியினர் கேட்டுப் பெற்றுள்ளனர்.

அதிமுக கூட்டணியில் இடம் பெற வாய்ப்பு இருந்த தமாகாவுக்கு சோளிங்கர் தொகுதி ஒதுக்கீடு செய்ய ஏற்பாடு செய்யப்பட் டது. அங்கு, முன்னாள் எம்எல்ஏவும் பிரபல தனியார் பேருந்து உரிமையாளர்களில் ஒருவருமான ஏ.எம்.முனிரத்தினம் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி, அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் பட்டியலில் சோளிங்கர் தொகுதி இடம் பெறவில்லை. ஒரு கட்டத்தில் அதிமுக கூட்டணியில் தமாகா இடம்பெறாது என்ற தகவலால் சோளிங்கர் தொகுதிக்கு அதிமுக கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் என்.ஜி.பார்த்தீபன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இதற்கிடையில், மக்கள் நலக் கூட்டணியில் தமாகா சேர்ந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அக்கட்சியினர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். தமாகாவில் இருந்த சோளிங்கர் முன்னாள் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம் தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மேலும், சோளிங்கர் தொகுதியை தனக்கு பெற்றுத்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஆற்காடு தொகுதி வழங்கப்பட்டது. எனவே, பலமில்லாத ஆற்காடு தொகுதியை விட்டுக் கொடுத்து சோளிங்கர் தொகுதியை கேட்டுப்பெற காங்கிரஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும், ஏ.எம்.முனிரத்தினம் தரப்பில் திமுக முக்கிய நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இறுதியாக ஆற்காடு தொகுதியை விட்டுக் கொடுத்த காங்கிரஸ் கட்சி, சோளிங் கர் தொகுதியைப் பெற்றது. அங்கு ஏ.எம்.முனிரத்தினம் போட்டியிட உள்ளார் என்ற உறுதியான தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து, காங்கிரஸ் கட்சியினர் கூறும்போது, ‘‘சோளிங்கர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து கடந்த முறை ஏ.எம்.முனிரத்தினம் மனு அளித்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவாக இருந்த அருள் அன்பரசு மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் போட்டி வேட்பாளராக ஏ.எம்.முனிரத்தினம் போட்டியிட்டார். அப்போது, 60,925 வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பிடித்தார். 9,038 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக கூட்டணியில் இடம் பிடித்த தேமுதிக வேட்பாளர் பி.ஆர்.மனோகரிடம் தோல்வியடைந்தார்.

எனவே, இந்த முறை எப்படியும் சீட்டு வாங்கி எம்எல்ஏவாக முனிரத்தினம் முயற்சி செய்துவருகிறார். இதற்காகவே, ஆற்காடு தொகுதியை கொடுத்து சோளிங்கர் தொகுதியை பெற்றுள்ளார். மீண்டும் அவர் காங்கிரஸ் கட்சியின் கைச் சின்னத்தில் போட்டியிடுவதால் அவருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது’’ என்றனர்.

கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பிடித்த தேமுதிக வேட்பாளர் பி.ஆர்.மனோகரிடம், காங்கிரஸ் போட்டி வேட்பாளராக நின்ற முனிரத்தினம் 9,038 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x