

சென்னை: அண்ணா பொது தொழிலாளர் சங்க உறுப்பினர்கள், பணி நிரந்தரம் கோரி உரிய ஆவணங்களை மின் வாரியத்துக்கு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு, 5 ஆண்டுகள் பணியை நிறைவு செய்த 21 ஆயிரத்து 600 ஊழியர்களை பணிநிரந்தரம் செய்வது தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதுசம்பந்தமான பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அண்ணா பொது தொழிலாளர் சங்கம், ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து விட்டது. மற்ற தொழிற்சங்கங்கள் கையெழுத்திட்டதால் 2007-ம் ஆண்டு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், தங்கள் சங்கத்தின் உறுப்பினர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி அண்ணா பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில் எழுப்பப்பட்ட பிரச்னை, தொழிலாளர் தீர்ப்பாயத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், அண்ணா பொது தொழிலாளர் சங்கத்தின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து அண்ணா பொது தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கதிர்வேல் தாக்கல் செய்த வழக்கை நீதிபதி எம்.கோவிந்தராஜ் விசாரித்தார். அப்போது மனுதாரர் சங்கம் தரப்பில், 2007-ம் ஆண்டு ஒப்பந்தத்தில் தங்கள் சங்கம் கையெழுத்திடாததால், அந்த உத்தரவு தங்களை கட்டுப்படுத்தாது என்றும், உச்ச நீதிமன்ற உத்தரவுகளின்படி பணி நிரந்தரம் கோர தங்களுக்கு உரிமையுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், கடந்த 2007-ம் ஆண்டு ஒப்பந்தத்தை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளதால், மனுதாரர் சங்கம் எந்த நிவாரணத்தையும் கோர முடியாது என மின்சார வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டாலும், பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளதால் இந்த ஒப்பந்தம், மனுதாரர் சங்கத்தை கட்டுப்படுத்தும் எனவும், எந்த நிவாரணமும் கோர முடியாது எனவும் கூறி, தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டார்.
அதேசமயம், மனுதாரர் சங்கத்தில் உள்ள பல உறுப்பினர்கள், ஐந்து ஆண்டுகள் பணி உள்ளிட்ட மின்சார வாரியம் நிர்ணயித்துள்ள தகுதியை பெற்றுள்ளதால், உரிய ஆவணங்களை நான்கு வாரங்களில் மின்சார வாரியத்திடம் வழங்க வேண்டும் எனவும், இதை ஆறு வாரங்களில் சட்டப்படி பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என மின்சார வாரியத்துக்கு நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.