

அரக்கோணம், வாலாஜா, ஆற்காடு நகராட்சிகளில் மோசமான நிலையில் உள்ள அடிப்படை கட்டமைப்பு வசதிகளை துரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்ட முதல் நகராட்சி என்ற பெருமை வாலாஜாவுக்கு உண்டு. கடந்த 1866-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நகராட்சி 1998-ம் ஆண்டு இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதன்பிறகு நகராட்சி பெரியளவில் வளர்ச்சி அடையாமல் முடங்கியுள்ளது. 24 வார்டுகளுடன் 26,790 வாக்காளர்கள் உள்ள நகராட்சியில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இறைச்சி மார்க்கெட் தனியாக கட்ட வேண்டும், பேருந்து நிலையத்தில் உள்ள பழைய கட்டிடங்களை இடித்து விரிவாக்கம் செய்ய வேண்டும், நகராட்சி கழிவுநீர் நேரடியாக பாலாற்றில் கலப்பதால் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை இங்கு பிரதானமாக உள்ளது.
அரக்கோணம்
சென்னையின் கடைசி எல்லை என்று அழைக்கப்படும் அரக்கோணம் கடந்த 1958-ம் ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சியாக பயணத்தை தொடங்கி, 1975-ம் ஆண்டு இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1984-ம் ஆண்டு முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்குள்ள 36 வார்டுகளில் 66,845 பேர் வாக்களிக்க உள்ளனர். நகரின் நீண்ட நாள் பிரச்சினையாக இருப்பது பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஓடியன்மணி திரையரங்கம் வரை செல்லும் சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக புறவழிச்சாலை அமைக்க வேண்டும். இறுதிக் கட்டத்தில் உள்ள பாதாள சாக்கடை திட்டத்தை முடிக்க வேண்டும், கடந்த 5 ஆண்டுகளில் பராமரிப்பு இல்லாத பூங்காக்களை சீரமைக்க வேண்டும், உப்புகுளத்தை சீர் செய்து பொழுதுபோக்கும் இடமாக மாற்ற வேண்டும், சில்வர்பேட்டை குப்பை கிடங்கு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும், மார்க்கெட் பகுதியை இடித்து நவீன மார்க்கெட் வளாகம் கட்ட வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பழமையான நகராட்சிகளில் ஒன்று ஆற்காடு. முகலாயர்கள் ஆட்சியின் கட்டுப்பாட்டில் தமிழகத்தின் பெரும் பகுதியை ஆண்ட ஆற்காடுநவாபுகளின் தலைநகரமாக ஆற்காடு இருந்தது. ஆங்கிலேயர் களின் கிழக்கிந்திய கம்பெனியின் வரலாற்றில் 1751-ல் நடைபெற்ற ஆற்காடு போர் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்தியது என்றுகூறலாம். ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டில் ஆற்காடு வந்த பிறகு 1899-ம் ஆண்டு பேரூராட்சியாக அறிவிக் கப்பட்டது. 1959-ல் மூன்றாம் நிலை நகராட்சியாகவும், 1975-ல் இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1998-ல் முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆற்காடு நகராட்சியில் 30 வார்டுகளில் 46,988 பேர் வாக்களிக்க உள்ளனர்.
வரலாற்றில் நீங்கா இடம் பிடித்துள்ள ஆற்காடு நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக ஆற்காடு-ஆரணி புறவழிச்சாலை, காய்கறி மொத்த வணிகர்களுக்கு நிரந்தர இடம், பராமரிப்பு இல்லாத பூங்காக்களை சீரமைக்க வேண்டும் என்பது பிரதான கோரிக்கையாக உள்ளது.