

வேலூர் மாநகராட்சி 11-வது வார்டு அதிமுக வேட்பாளர் திமுகவினரால் கடத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் அப்படி ஒரு கடத்தல் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என காவல் துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாநகராட்சியில் உள்ள 58 வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடை பெறவுள்ளது. இதில், அதிமுக வேட்பாளர்களின் தேர்தல் பரப்புரை கடந்த இரண்டு நாட் களாக மந்தமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வேலூர் மாநகர மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில், ‘‘வேலூர் மநாகராட்சி 11-வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சுகேந்திரன், பிரச்சாரம் செய்துவந்த நிலையில் 16-ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தூண்டுதலின் பேரில் திமுகவினர் அவரை மிரட்டுவதாக கூறப்படுகிறது. அதேபோல், மற்ற அதிமுக வேட்பாளர்களையும் திமுகவினர் மிரட்டி வருகின்றனர். எனவே, 11-வது வார்டு அதிமுக வேட்பாளரை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும். அதிமுக வேட்பாளர்களை மிரட்டுவதில் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண் டும்’’ என குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து, மாவட்ட காவல் துறை அதிகாரிகள் தரப்பில் பேசும்போது, ‘‘அதிமுக வேட்பாளர் சுகேந்திரனை யாரும் கடத்தவும் இல்லை, மிரட்டவும் இல்லை. மேலும், தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் புகார் மனு அளிக்கப்பட்ட சம்பவம் கட்சி விஷயம் என்பதால் வெளியில் கூற விரும்பவில்லை என்றும் தெரிவித்துவிட்டார். இந்த கடத்தல் புகார் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி மாநில தேர்தல் ஆணையத்துக்கும் தகவல் தெரி விக்கப்படும்’’ என்றனர்.