விசைத்தறியாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்களுடன் அமைச்சர்கள் நடத்திய கூலி உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் புதிய முடிவு: 39 நாட்கள் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வருகிறது
திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் புதிய கூலி உயர்வு அறிவிக்கப்பட்டதால், விசைத்தறியாளர்களின் போராட்டம் முடிவுக்கு வரவுள்ளது.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் இரண்டரை லட்சம் விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. கூலிக்கு நெசவு செய்யும்விசைத்தறி உற்பத்தியாளர்கள் 35,000 பேர் இவ்விரு மாவட்டங்களிலும் உள்ளனர். கடந்த 1992-ம் ஆண்டு தொடங்கி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயர்வு ஒப்பந்தப்படி இவர்களுக்கு, ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வு வழங்கி வந்தனர். கடந்த 2014-ம் ஆண்டு முதல் கூலி உயர்வு ஒப்பந்தம் கடைபிடிக்கப்படவில்லை.
பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு கடந்த நவம்பர் மாத இறுதியில் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறியாளர்களிடையே கூலி உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி கடந்த 2014-ம் ஆண்டு கூலி உயர்வு ஒப்பந்தத்தில் இருந்து கடந்த டிசம்பர் 1-ம் தேதி முதல் சோமனூர் ரகத்துக்கு 23 சதவீதமும், இதர ரகங்களுக்கு 20 சதவீதமும் கூலி உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டது.
கடந்த டிசம்பர் 1-ம் தேதி முதல் கூலி உயர்வு அமல்படுத்தப்பட வேண்டிய நிலையில், ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பில் கூலி உயர்வு வழங்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த கோவை, திருப்பூர்மாவட்டத்தில் உள்ள விசைத்தறியாளர்கள் கடந்த ஜனவரி 9-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
கடந்த 39 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம்மங்கலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறியாளர்கள் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில், திருப்பூர், பல்லடம், சோமனூர் உள்ளிட்ட அனைத்துப் பகுதி ஜவுளி உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். பல்லடம், மங்கலம், வேலம்பாளையம், அவிநாசி, தெக்கலூர், புதுப்பாளையம், பெருமாநல்லூர், சூலூர் கண்ணம்பாளையம் ஆகிய சங்கங்களைச் சேர்ந்த விசைத்தறியாளர்கள் கலந்து கொண்டனர். சோமனூர் விசைத்தறியாளர்கள் கலந்து கொள்ளவில்லை. தற்போதுள்ள சூழலைக் கருத்தில் கொண்டு சோமனூர் ரகத்துக்கு 19 சதவீதமும், இதர ரகங்களுக்கு 15 சதவீதமும் கூலி உயர்வு வழங்குவது என பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கங்களின் கூட்டியக்க செயலாளர் எம்.பாலசுப்ரமணியம் கூறும்போது, ‘‘கடந்த 39 நாட்களாக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வரும் நிலையை எட்டியுள்ளது. பேச்சுவார்த்தையில் அறிவிக்கப்பட்டுள்ள கூலி உயர்வை ஏற்று மொத்தமுள்ள 9 சங்கங்களில் கண் ணம்பாளையம், பல்லடம், மங்கலம்,63-வேலம்பாளையம் ஆகிய 4 சங்கங்கள் விசைத்தறிகளை இயக்க முடிவு செய்துவிட்டனர். அவிநாசி, தெக்கலூர், பெருமாநல்லூர், புதுப்பாளையம் சங்கத்தினர் நாளை (இன்று) தங்களது பொதுக்குழுவைக் கூட்டி முடிவைஅறிவிப்பதாக கூறியுள்ளனர். சோமனூர் சங்கத்தினர் மட்டும் இம்முடிவை ஏற்கவில்லை’’ என்றனர்.
சோமனூர் சங்கத் தலைவர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘சோமனூர் சங்கம் இந்த பேச்சு வார்த்தையில் பங்கேற்கவில்லை. போராட்டம் வாபஸ் என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவின்படி கையெழுத்து வடிவிலான ஒப்பந்தத்தை எங்கள் சங்கம் ஏற்கும். அதுவரை எங்களது போராட்டம் தொடரும்’’ என தெரிவித்துள்ளார்.
