Published : 16 Feb 2022 08:47 AM
Last Updated : 16 Feb 2022 08:47 AM
சென்னை: சென்னை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி கடந்த 2015, 2017-ம் ஆண்டுகளில் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, பெத்தேல் நகரில் இருந்த 2,839 ஆக்கிரமிப்பாளர்கள் குறித்த விவரங்களை தாக்கல் செய்துள்ளதாகவும், இந்த விவரங்கள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவர்களுக்கு மாற்று இடம் வழங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்த மனுதாரர் தரப்பில், கடந்த 2015-ம் ஆண்டு இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்தபோது 111 ஆக்கிரமிப்புகளே இருந்தன. தற்போது 30 ஆயிரம் பேர் வசிப்பதாக கூறுவது தவறு என்று வாதிடப்பட்டது.
பெத்தேல் நகர் குடியிருப்போர் சங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேல் வசித்து வரும் 30 ஆயிரம் மக்களை ஒரே இரவில் அப்புறப்படுத்தக்கூடாது, அவர்களை புதிய இடத்துக்கு மாற்றுவதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன என்று வாதிட்டார்.
ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை வரன்முறைப்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அப்படி வரன்முறைப்படுத்த அனுமதித்தால் அது தவறை ஊக்குவிப்பதுபோலாகும் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.
மேலும், மாற்று இடத்தில் குடியமர்த்தும் அரசின் நடவடிக்கைகளை ஏற்று, ஆக்கிரமிப்பாளர்கள் பெத்தேல் நகர் நிலத்தை காலி செய்வதாக உத்தரவாதம் அளிக்க வேண்டும், இது தொடர்பாக தனிப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களின் கருத்துகளைப் பெற்று தெரிவிக்க வேண்டும் என்று அரசுக்கு அறிவுறுத்தினர்.
பின்னர் நீதிபதிகள், தற்போது மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள், மேய்ச்சல் நிலங்களாக இல்லை. நீர்நிலை ஆக்கிரமிப்புகளே வெள்ளத்துக்கும், மழையில்லாக் காலங்களில் தண்ணீர் பஞ்சத்துக்கும் காரணமாகிறது. அதிக நீர்நிலைகளைக் கொண்ட, ஆசிர்வதிக்கப்பட்ட மாநிலம் தமிழகம். தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது என முன்னோர்கள் திட்டமிட்டதாலேயே ஒவ்வொரு கோயிலிலும் குளங்கள்கட்டப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பாளர்களை மாற்று இடத்தில் குடியமர்த்துவதுகூட ஒருவகையில் மறைமுகமாக ஆக்கிரமிப்பை ஊக்குவிப்பது போன்றதுதான்.
நில மாபியாக்கள், ஆக்கிரமிப்பு நிலங்களில் ஏழைகளைக் குடியமர்த்தி, அரசிடம் வரன்முறை பெற்று, பின் அவர்களை வெளியேற்றி விடுவதால்தான் ஏழைகள், ஏழைகளாக இருக்கின்றனர்.
அதுபோலவே, ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டாலும்,அது தவறாகப் பயன்படுத்துவதால்தான் ஒடுக்கப்பட்டவர்கள் எப்போதும் ஒடுக்கப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். யாரும் நாட்டைப் பற்றி நினைப்பதில்லை என்றுவேதனை தெரிவித்து, விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT