முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்யும் கேரள அதிகாரிகள்.
முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்யும் கேரள அதிகாரிகள்.

முல்லைப் பெரியாறு அணைக்குள் அத்துமீறி நுழைந்து கேரள அதிகாரிகள் ஆய்வு: தமிழக விவசாயிகள் கண்டனம்

Published on

கூடலூர்: முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் அத்துமீறி கேரள அரசியல்வாதிகள், அதிகாரிகள், வழக்கறிஞர்கள் நுழைந்து ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கு 5 மாவட்ட விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழக - கேரள எல்லையில் முல்லைப் பெரியாறு அணை அமைந்து இருந்தாலும், தமிழகத்தின் கட்டுப்பாட்டில்தான் அணை உள்ளது. இந்நிலையில் சமீபகாலமாக கேரள அரசியல்வாதிகள், அங்குள்ள கட்சிப் பிரமுகர்கள் அணைக்குள் அத்துமீறிச் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் கேரள நீர்வளத் துறை முதன்மைப் பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ், செயற்பொறியாளர் ஹரிகுமார் தலைமையிலான குழுவினர் அணையின் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டனர். தமிழக உதவிப் பொறியாளர் ராஜகோபால் உடனிருந்தார். இந்த ஆய்வுக்கு 5 மாவட்ட விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர் பாலசிங்கம் கூறியதாவது:

அணையில் தமிழகம் சார்பில் தனி செயற்பொறியாளர் இருக்கிறார். இவரிடம் இருந்தே அணை குறித்த அனைத்து தகவல்களையும் கேரளா பெற்று வருகிறது. இந்நிலையில் கேரளாவுக்கும் தனி அதிகாரியை நியமிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் அணை பராமரிப்பதற்கான ஆய்வுதான் இது என்று கேரளா கூறுகிறது.

வழக்கறிஞர் ஏன் வந்தார்?

இதில் உச்ச நீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக வாதாடும் வழக்கறிஞர் ஜெ.பி.குப்தா எதற்கு வந்தார் என்று புரியவில்லை. பராமரிப்புப் பணிக்காக என்றால் அதற்கான விவரங்களை எழுத்துப்பூர்வமாக தமிழக அதிகாரிகளுக்குத் தெரிவித்திருக்க வேண்டும்.

அதைவிடுத்து தன்னிச்சை யாக கேரளாவில் இருந்து யார் வேண்டுமானாலும் அணைக்குள் வரும் நிலை கண்டிக்கத்தக்கது. வருகைப் பதிவேட்டை முறையாக பராமரித்து இதுபோன்ற நிலையைத் தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in