

ஓசூர் மாநகராட்சியின் முதல் மேயர் பதவிக்காக, அதிகளவில் வார்டுகளை கைப்பற்ற திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஆங்கிலேயர்கள் காலத்தில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் ஓசூர் தலைமையிடமாக இருந்தது. தற்போது வடமாநிலங்கள் மற்றும் கர்நாடக மாநிலத்துக்கும் தமிழகத்தின் நுழைவுவாயிலாக ஓசூர் திகழ்கிறது. ஓசூரில் மலர்கள், காய்கறிகள் அதிகளவில் விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர்.
குண்டூசி முதல் விமான பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் வரை சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான சிறு, குறுந்தொழில்களும், பெரு நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் கிடைத்துள்ளது. ஓசூரில் தமிழ், கன்னடம், தெலுங்கு, உருது உட்பட பன்மொழி பேசும் வாக்காளர்கள் நிறைந்துள்ளனர்.
கடந்து வந்த பாதை
கடந்த 1902-ம் ஆண்டு ஓசூர் ஊராட்சியாக இருந்த நிலையில், 1962-ம் ஆண்டு தேர்வுநிலை பேரூராட்சியாகவும், 1992-ம் ஆண்டு 2-ம் நிலை நகராட்சியாகவும், 1998-ம் ஆண்டு தேர்வுநிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. ஒசூர் நகராட்சியில் ஜூஜூவாடி, மூக்கண்டப்பள்ளி, சென்னத்தூர், ஆவலப்பள்ளி ஆகிய கிராம ஊராட்சிகள் மற்றும் மத்திகிரி பேரூராட்சி ஆகியவைகள் இணைக்கப்பட்டு 30 வார்டுகளாக கடந்த 2011-ம் ஆண்டு ஓசூர் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ம் தேதி தமிழகத்தின் 13-வது மாநகராட்சியாக ஓசூர் அறிவிக்கப்பட்டது. தற்போது 45 வார்டுகளுடன் ஓசூர் மாநகராட்சி முதல் தேர்தலை சந்திக்கிறது.
274 பேர் போட்டி
ஓசூர் மாநகராட்சியில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 292 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 8 ஆயிரத்து 109 பெண் வாக்காளர்கள், இதரர் 97 உட்பட 2 லட்சத்து 21 ஆயிரத்து 498 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தற்போது நடைபெறவுள்ள 45 வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு பிரதான கட்சிகள், சுயேச்சைகள் உட்பட 274 பேர் போட்டியிடுகின்றனர்.
களத்தில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வாக்காளர்களிடம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் பெரும்பான்மையான வார்டுகளை கைப்பற்ற, திமுக, அதிமுக இடையே கடும் போட்டி உள்ளது.
பாதாள சாக்கடை திட்டம்
ஓசூர் மாநகராட்சியில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளதால், கழிவு நீர் செல்ல வழி இல்லை. பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
அனைத்து வார்டுகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை, குப்பைகள் முறையாக அகற்றுதல், காய்கறி சந்தைகளை சீர்படுத்தி தரம் உயர்த்துதல், நகரில் ஷேர் ஆட்டோக்கள் இயக்க அனுமதி உள்ளிட்டவை பிரதான கோரிக்கையாக உள்ளது. இதேபோல், கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி வரை கொண்டு வரப்படும் மெட்ரோ ரயில் சேவை திட்டத்தை ஓசூர் வழியாக சூளகிரி வரை கொண்டு செல்ல வேண்டும்.
சந்திர சூடேஸ்வரர், பிரம்மன், விஷ்ணு ஆகிய 3 மலைகளை இணைக்கும் ரோப் கார் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மாநகராட்சியைக் கைப்பற்றும் கட்சியினர் நிறைவேற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை 45 வார்டு மக்களும் முன் வைத்துள்ளனர்.