

புதுச்சேரி: பாஜகவின் முதல் எதிரி இந்திய அரசியலமைப்பு சட்டம் தான் அதைச் சிதைக்க பாஜக, ஆர்எஸ்எஸ் முயல்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கூட்டாட்சிக் கோட்பாடும் நாடாளுமன்ற ஜனநாயகமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நேற்று (பிப். 11) இரவு நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்பி தலைமை நடைபெற்ற கருத்தரங்கில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், புதுச்சேரி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சிவா உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது: "தமிழக அரசு நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிய நிலையில் அதனை அவர் ஏற்கவில்லை, நிராகரித்துவிட்டார். ஆளுநருக்கு அதிகாரம் உண்டு திருப்பி அனுப்ப. அந்த சட்ட மசோதாவில் ஏதேனும் திருத்தம் செய்ய விரும்பினால், விளக்கம் வேண்டுமானால் மாநில அரசுக்கே திருப்பி அனுப்பி அதை சரி செய்ய சொல்லி அனுப்பலாம்.
ஆனால் அவர் இதை சட்டமாக்க முடியாது, குடியரசுத் தலைவருக்கு அனுப்ப மாட்டேன் என்று மறுத்திருக்கிறார். அது அவரது அதிகாரத்துக்கு மீறிய செயல். NEET என்ற இந்த வார்த்தையில் மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வு என்பதே இல்லை. எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்ற நீண்ட பார்வை இருக்கிறது. பள்ளி படிப்புக்குக்கூட இந்த நுழைவுத் தேர்வு வரும். அவர்களின் நோக்கம் எல்லோரும் 100 விழுக்காடு கல்வி பெற்றவர்களாக மாற்றிவிட்டால் அடிப்படை பணிகளை செய்கின்ற தொழிலாளர்கள் இல்லாமல் போய்விடுவார்கள்.
ஆகவே திட்டமிட்டு உள்நோக்கத்துடன் பள்ளி படிப்பிலேயே இடைநிற்றல் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை திணிக்கின்றனர். தமிழகம் மட்டும் தான் மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வுக்கு எதிராக சட்ட மசோதாவை நிறைவேற்றி ஒப்புதல் கேட்டு போராடிக் கொண்டிருக்கிறது. வேறு எந்த மாநிலத்திலும் இது இல்லை. மாநில அரசுகளுக்கு ஒத்திசைவு பட்டியலில் இடம்பெற்றுள்ள துறைகள் தொடர்பான சட்டம் இயற்றக்கூடிய அதிகாரம் உண்டா? இல்லையா? மாநில அரசுகளின் அதிகாரங்கள் என்ன? மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள் என்ன? இந்திய அரசிலமைப்பு சட்டம் வலிறுத்தக்கூடிய கூட்டாட்சி கோட்பாடுகள் எந்த நிலையில் இருக்கிறது. இதனை விவாதிக்கவே விடுதலை சிறுத்தைகள் கட்சி இக்கருத்தரங்கை ஒருங்கிணைத்துள்ளது.
இந்தியாவில் நாங்கள் சாதியை ஒழிப்போம், சகோதரத்துவத்தை நிலை நாட்டுவோம், அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டம் சொல்கிற சமத்துவத்தை வென்றெடுப்போம் என்று பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ஒருவரைப் பேச சொல்லுங்கள் நான் இந்த அரசியலை விட்டே வெளியேறுகிறேன். விடுதலை சிறுத்தைகள் கட்சியைக் கலைத்து விடுகிறேன்.
ஆனால் அதை அவர்கள் பேச மாட்டார்கள். பாஜகவின் முதல் எதிரி இந்திய அரசியலமைப்பு சட்டம் தான் அதைச் சிதைக்க பாஜக, ஆர்எஸ்எஸ் முயல்கிறது. பாஜக, ஆர்எஸ்எஸ் பொறுத்தவரை மத மாற்றத்தைத் தடுத்து. காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை நீர்த்துப் போகச் செய்ய வேண்டும் என்பது தான்.
இந்த இரண்டு காரணங்களுக்காக மட்டும்தான் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுடன் நெருங்கி வருகிறார்கள். இந்தியர்களை மதத்தின் பெயரால், இந்துக்களை சாதியின் பெயரால் பிரிக்கிறார்கள். பட்டியலின மக்களை சேர்த்துக்கொண்டு சிறுபான்மையினரை வெறுக்கின்ற வெறுப்பு அரசியலை விதைக்கிறார்கள். வன்முறைகளை யுக்திகளாக கையாளுகிறார்கள். பாஜகவின் கனவு திட்டம், செயல் திட்டம் என்னவென்றால் ஒரு கட்சி, ஒரு ஆட்சி என்பதாகும். இங்கே மாநில கட்சிகள் வளர்ந்து வருகிறது. ஒரு கட்சி ஒரு ஆட்சி என்று நினைக்கும் இவர்கள் மாநில கட்சிகளே இருக்கக்கூடாது என்று நினைக்கிறார்கள். ஆனால் அதை இந்த அரசியலமைப்பு சட்டம் ஒத்துக்கொள்ளாது. ஆகவே இந்த அரசியலமைப்பு சட்டம் தான் பாஜகவின் முதல் எதிரி. அவர்களின் மறைமுக நோக்கமே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் தூக்கியெறிவது தான்."
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.