Published : 14 Apr 2016 04:55 PM
Last Updated : 14 Apr 2016 04:55 PM

கீழ்பவானி கான்கிரீட் கால்வாய் திட்டம்: திமுக தேர்தல் அறிக்கைக்கு விவசாயிகள் கண்டனம்

ஈரோட்டில் கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் சங்க தலைவர் செ.நல்லசாமி தலைமையில் நடந்தது. ஈரோடு மாவட்ட செயலாளர் கள் செ.கோபிநாத், தங்கராசு,நல்லசிவம், திருப்பூர் மாவட்ட செயலாளர்கள் ஏ.கே.சுப்பிரமணியம், விஸ்வநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் சிக்கனமான முறையில் நீர் நிர்வாகம் நடைபெறும் கீழ்பவானி பாசனம் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்ட விளைநிலங்கள் பயன் பெற்று வருகின்றன. பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரைக் கொண்டு கீழ்பவானிப் பாசனத்தில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கரும், பழைய பவானி பாசனப்பகுதிகளில் 40 ஆயிரத்து 247 ஏக்கரும் பாசனம் பெறுகின்றன.

கீழ்பவானிக் கால்வாயில் ஒரு நேரத்தில் பாதி அளவான ஒரு லட்சத்து 3,500 ஏக்கருக்கு மட்டும் நீர் திறக்கப்படுகிறது. மீதம் உள்ள ஒரு லட்சத்து 3,500 ஏக்கரில் இருக்கும் கிணறுகளுக்கும், ஆழ்குழாய்க் கிணறுகளுக்கும் மறைமுகமாகத் தண்ணீர் கிடைத்து விடுகிறது.

தலைமைக் கால்வாயின் வலதுபுறம் 124 மைல் நீளத்திற்கு, சுமார் 2 கி.மீ அகலத்திற்கு பாசன நீரும், குடிநீரும் கிடைத்து விடுகிறது. இதன் மூலம் 25 ஆயிரம் ஏக்கர் பலனடைகிறது. கால்வாயில் ஏற்படும் கசிவு நீர் மூலம் உரம்பு நீர் பாசனத் திட்டங்கள் வழியாக 17 ஆயிரம் ஏக்கர் பாசனம் பரவலாகப் பெறுகின்றது.கீழ்பவானிக் கால்வாயில் திறக்கப்படும் நீர், வீணாகக் கடலுக்குச் செல்வதே இல்லை. ஆவியாகி, பெரிய அளவில் விரையம் ஆவதும் இல்லை. இந்நிலையில் கீழ்பவானிப் பாசனக் கால்வாயை கான்கிரீட் கால்வாயாக மாற்றப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லியிருப்பது கண்டிக்கத் தக்கது.

பாசனக் கால்வாய்களைக் கான் கிரீட் கால்வாய்களாக மாற்றுவதால் ஏற்படவிருக் கும் நன்மைகளை விட தீமைகளே அதிகமாக இருக்கும். பல ஊர்களில் குடிநீர்ப் பஞ்சம் ஏற்படும்.

பரம்பிக்குளம்-ஆளியாறு பாசனத் திட்டத்திலும், முல்லைப் பெரியாறு பாசனத் திட்டத்திலும் கான்கிரீட் கால்வாய் திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. கால்வாய் மராமத்துச் செலவு ஆண்டுதோறும் கோடிக் கணக்கில் ஏற்படுவதுடன், நீர் திறப்பதில் கால தாமதமும் ஏற்படுகிறது.

பாசனப் பகுதி பயனாளிகளின் எண்ணங்களையும், எதிர்பார்ப்பு களையும் அறிந்து திமுக தேர்தல் அறிக்கை தயாரித்திருக்க வேண்டும். திமுகவின் இந்த தேர்தல் வாக்குறுதி அறிவிப்பு திரும்பப் பெறப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x