தமிழக அரசு பேருந்தில் மீட்கப்பட்ட கைக்குழந்தை புதுச்சேரி காப்பகத்தில் ஒப்படைப்பு

தமிழக அரசு பேருந்தில் மீட்கப்பட்ட கைக்குழந்தை புதுச்சேரி காப்பகத்தில் ஒப்படைப்பு
Updated on
2 min read

புதுச்சேரி: விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி வந்த தமிழக அரசு பேருந்தில் 15 நாட்கள் ஆன ஆண் குழந்தையை, பெண் பயணி ஒருவரிடம் கொடுத்துவிட்டு, 20 வயது பெண் ஒருவர் இறங்கிச் சென்ற நிலையில், அக்குழந்தையை மீட்ட குழந்தைகள் நலக்குழுவினர் தனியார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு கடந்த 3-ம் தேதி தமிழக அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தில் காட்ராம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் பச்சிளம் குழந்தையுடன் சுமார் 20-வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஏறியுள்ளார். அப்போது பேருந்தில் அமர்ந்திருந்த செல்வி என்பவர், பச்சிளம் குழந்தையுடன் வந்த அந்தப் பெண்ணை பேருந்து இருக்கையில் அமரும்படி கூறியுள்ளார். ஆனால், அந்தப் பெண் அமரமறுத்துவிட்டு, குழந்தையை வைத்துக்கொள்ளும்படி செல்வியிடம் கொடுத்துள்ளார்.

குழந்தையை மடியில் படுக்கவைத்திருந்த செல்வி, இந்திராகாந்தி சிக்னல் வந்தவுடன் குழந்தையை கொடுத்த பெண்ணை தேடியபோது, அந்தப் பெண் மாயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த செல்வி, பேருந்திலிருந்து இறங்கி, உருளையன்பேட்டை காவல் நிலையம் சென்று நடந்த சம்பவத்தை கூறி குழந்தையை ஒப்படைத்துள்ளார்.

பின்னர் அக்குழந்தை பெண் காவலர் நித்யா மூலம், குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து குழந்தைகள் நலக்குழு தலைவர் சிவசாமி மற்றும் குழு உறுப்பினர்கள் முருகையன், சுலோச்சனா செல்வம் ஆகியோர் அந்த பச்சிளங்குழந்தையை புதுச்சேரியில் உள்ள தனியார் காப்பக நிர்வாகியிடம் ஒப்படைத்தனர். தற்போது குழந்தை காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக இன்று (பிப். 10) அரியாங்குப்பத்தில் குழந்தைகள் நலக்குழு தலைவர் சிவசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், ”தமிழக அரசு பேருந்தில் ஏறிய 20 வயது பெண், பேருந்தில் பயணித்த செல்வி என்பவரிடம் பச்சிளம் குழந்தையை கொடுத்துவிட்டு இறங்கி சென்றுவிட்டார். குழந்தையை போலீஸார் எங்களிடம் ஒப்படைத்தனர். உடனடியாக குழந்தை காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டது.

குழந்தை தமிழகப் பகுதியான விழுப்புரத்திலிருந்து அரசு பேருந்தில் வந்ததால் குழந்தை தமிழகப் பகுதியைச் சேர்ந்ததா அல்லது புதுச்சேரி பகுதியைச் சேர்ந்ததா என விசாரித்து வருகிறோம். புதுச்சேரி மாநிலத்தில் தாய்-தந்தையை இழந்த குழந்தைகள் தங்களை பதிவு செய்தால், அவர்களுக்கு மத்திய அரசின் மூலம் சுமார் ரூ.10 லட்சம் நிதி அளிப்பதாக ஒரு தகவல் வந்துள்ளது. புதுச்சேரியில் இதுபோன்ற பல குழந்தைகள் உள்ளனர். ஆனால் இதுவரை 12 பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர்.

இதேபோல் தாய் அல்லது தந்தை ஆகியோரில் யாரேனும் ஒருவரை இழந்தவர்கள் 250 பேர் பதிவு செய்துள்ளனர். எனவே இதுவரை தெரியாமல் இருந்திருந்தால் அரியாங்குப்பத்தில் இயங்கி வரும் குழந்தைகள் நலக்குழுவை அணுகி பதிவு செய்து கொள்ள வேண்டும். நாங்கள் கொடுக்கும் சான்றிதழ் மூலம் அந்த நிதியை பெற உதவியாக இருக்கும். மேலும் தற்போது காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட குழந்தை குறித்து தொடர்புகொள்ள விரும்பினால் புதுச்சேரி குழந்தைகள் நலக்குழுவை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in