கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: மார்ச் 5-ல் தீர்ப்பு

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: மார்ச் 5-ல் தீர்ப்பு

Published on

மதுரை: சேலம் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் மார்ச் 5-ல் மதுரை நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ். இவர் நாமக்கல்லை சேர்ந்த மாணவி ஒருவரை காதலித்தார். கடந்த 2015-ம் ஆண்டு கல்லூரிக்கு சென்ற கோகுல்ராஜ், நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இந்த கொலை வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ், அவரது கூட்டாளிகள் 17 பேரை கைது செய்தனர்.

நாமக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த வழக்கு விசாரணை, கோகுல்ராஜ் தாய் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் மதுரை மாவட்ட வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரை நீதிமன்றத்தில் கடந்த 2 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு நீதிபதி சம்பத்குமார் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது யுவராஜ் உட்பட அனைவரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை மார்ச் 5-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in