நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் | ஊர் கூடி ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்தி, போட்டியின்றி தேர்வு செய்த மக்கள்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் | ஊர் கூடி ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்தி, போட்டியின்றி தேர்வு செய்த மக்கள்
Updated on
1 min read

தஞ்சாவூர்: பேராவூரணி அருகே பெருமகளூர் பேரூராட்சிக்குட்பட்ட 10-வது வார்டைச் சேர்ந்தவர்கள், ஒரு மனதாக ஒருவரை தேர்வு செய்து, பொது வேட்பாளராக அறிவித்து, அவரை வார்டு உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பெருமகளூர் பேரூராட்சி 12 வார்டுகளை கொண்டது. பேரூராட்சி தேர்தலுக்காக 50 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர்.

இதில், இருவரின் மனு தள்ளுபடியும், 7 பேர் வாபஸ் பெற்றனர். இதில் 5 வது வார்டை சேர்ந்த திலகமும், 10 - வது வார்டை சேர்ந்த கல்யாணி ஆகிய இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 39 பேர் தேர்தலை சந்திக்கின்றனர்.

இதில், 10-வது வார்டு பகுதிகளான திரு.வி.நகர், பாரதி நகர், கென்னடி நகர், இந்திரா நகர் ஆகிய நான்கு நகரைச் சேர்ந்தவர்களும், கல்யாணி(55) என்பவரை பொது வேட்பாளராக அறிவித்தனர். இதையடுத்து அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். அந்த வார்டில் வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், கல்யாணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இதுகுறித்து 10-வது வார்டு பொதுமக்கள் கூறியதாவது: "எங்கள் பகுதியில் உள்ள நான்கு நகரை சேர்ந்தவர்கள் ஒன்று கூடி, ஒவ்வொரு தேர்தலின் போதும், சுழற்சி முறையில் நான்கு நகரில் இருந்து ஒருவரை பொது வேட்பாளராக அரசியல் கட்சி சார்பின்றி நிறுத்துவோம்.

அந்த பொது வேட்பாளருக்கு எல்லோரும் ஆதரவு தெரிவிப்பதால், வேறு யாரும் போட்டியிடுவதில்லை. அதன்படி இம்முறை பாரதி நகரை சேர்ந்த கல்யாணி என்பவரை தேர்வு செய்துள்ளோம். இது போன்று பல தேர்தல்களை நாங்கள் ஒற்றுமையாகவும், பகைமை இல்லாமலும், செலவு இல்லாமலும் போட்டியின்றி தேர்தலை சந்திதுள்ளோம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர் பின்னர் யார் பேரூராட்சி தலைவராக வருகிறாரோ அவருக்கு ஆதரவை அளிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். நாங்கள் ஒற்றுமையாக இருப்பதால், எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நாங்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்டு நிவர்த்தி செய்து வருகிறோம்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in