

வேலூர்: ‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலியாக சர்வதேச போட்டியில் பங்கேற்க உதவிக்காக காத்திருந்த வேலூர் வலு தூக்கும் வீராங்கனை கவிதாவுக்கு காட்பாடி சிருஷ்டி பள்ளிகள் குழுமத்தலைவர் ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார்.
வேலூர் சத்துவாச்சாரி காந்திநகர் ஜெய்பீம் தெருவைச் சேர்ந்தவர் கவிதா. இவர், தேசிய மற்றும் மாநில அளவிலான வலு தூக்கும் போட்டிகளில் பதக்கங்களை குவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான ‘பெஞ்ச் பிரஸ்’ போட்டியில் 63 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார். இதன்மூலம், கஜகிஸ் தான் நாட்டில் வரும் மே மாதம் நடைபெற உள்ள சர்வதேச ‘பெஞ்ச் பிரஸ்’ சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
ஆனால், சர்வதேச போட்டியில் பங்கேற்கும் அளவுக்கு கவிதாவுக்கு வசதி வாய்ப்புகள் எதுவும் இல்லை. காரணம், 4 வயதில் தந்தையை இழந்த கவிதா, தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். வேலூர் மாநகராட்சியில் தினக்கூலி அடிப்படையில் தூய்மைப் பணியாளராக வேலை செய்துவரும் தாய் லட்சுமிக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.
கஜகிஸ்தான் நாட்டில் நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கேற்க குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் பணம் கட்டினால் மட்டுமே நுழைவு வாய்ப்பு கிடைக்கும். அதன்பிறகு போக்குவரத்து, தங்குமிடம் உள்ளிட்ட செலவுகள் என யாராவது உதவி செய்தால் மட்டும் போட்டியில் பங்கேற்க முடியும் என்ற நிலை உள்ளது. அவரது நிலை குறித்து ‘உதவிக்காக காத்திருக்கும் வேலூர் வீராங்கனை’ என்ற தலைப்பில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் நேற்று முன்தினம் (6-ம் தேதி) கட்டுரை வெளியானது.
இந்த கட்டுரையின் அடிப் படையில், வலு தூக்கும் வீராங் கனை கவிதாவுக்கு உதவ சிருஷ்டி பள்ளிகள் குழுமத்தலைவர் எம்.எஸ்.சரவணன் முன்வந்துள்ளார். கஜகிஸ்தான் நாட்டில் நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கேற்க நுழைவு கட்டண தொகை செலுத்து வதற்காக ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை கவிதாவிடம் எம்.எஸ்.சரவணன் நேற்று வழங்கி வாழ்த்தினார்.