நீரின்றி பசுமைக்கு ஏங்கும் கிருஷ்ணகிரி பூங்கா: நகராட்சி நிர்வாகம் பராமரிக்க பொதுமக்கள் வேண்டுகோள்

கிருஷ்ணகிரி டான்சி வளாகத்தில் உள்ள அம்மா பசுமை பூங்காவில் நீரின்றி காய்ந்து வரும் செடிகள்.
கிருஷ்ணகிரி டான்சி வளாகத்தில் உள்ள அம்மா பசுமை பூங்காவில் நீரின்றி காய்ந்து வரும் செடிகள்.
Updated on
1 min read

போதிய பராமரிப்பு மற்றும் நீரின்றி கிருஷ்ணகிரி டான்சி வளாகத்தில் உள்ள அம்மா பசுமை பூங்காவில் உள்ள செடிகள் கருகி வருகிறது. பூங்காவை நகராட்சி நிர்வாகம் பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி நகரில் வசிக்கும் மக்களுக்கு பொழுதுபோக்கு இடங்களாக அணை பூங்கா, அவதானப்பட்டி சிறுவர் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்டவைகள் உள்ளன. இந்நிலையில் நகரில் வசிக்கும் மக்களின் நீண்ட கால கோரிக்கை ஏற்று கடந்த 2016-ம் ஆண்டு, கிருஷ்ணகிரி டான்சி வளாகத்தில் நகராட்சி சார்பில் அம்மா பசுமை மற்றும் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. இங்கு சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களும் உள்ளன.

நடைப்பயிற்சி

நகரின் மையப் பகுதியில் உள்ள இப்பூங்காவுக்கு பொதுமக்கள், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் வந்து செல்கின்றனர். மேலும், காலை மற்றும் மாலை நேரத்தில் பொதுமக்கள் பலர் நடைபயிற்சியில் ஈடுபட்டு வருகின் றனர். பூங்கா, தனியார் அமைப்பு மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பூங்கா போதிய பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து வருகிறது. பூங்கா நுழைவு வாயிலில் உள்ள தண்ணீர் ஊற்று வறண்டும், அதனுள் பிளாஸ்டிக் காலி பாட்டில்கள் அதிகளவில் வீசியுள்ளனர். சிறுவர்கள் விளையாடி மகிழும் இரு ஊஞ்சலும் சேதம் அடைந்துள்ளதால், இங்கு வரும் சிறுவர்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

மின்மோட்டார் பழுது

செடி, மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் குழாயில் பொருத்தப் பட்ட மின்மோட்டார், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பழுதானது.

இதனால், தண்ணீர் இல்லாமல் மரங்கள், செடிகள் காய்ந்து கருகி வருகிறது.இதுதொடர்பாக பொதுமக்கள் சிலர் கூறும்போது, “பூங்காவை நகராட்சி நிர்வாகம் நேரடி கட்டுப்பாட்டில் பராமரிக்க வேண்டும். குப்பை தொட்டிகள் இல்லாததால், பூங்காவுக்கு வருபவர்கள் குப்பைகள் ஆங்காங்கே வீசிச் செல்கின்றனர். சோலார் பொருத்தப்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளது. சேதமான விளையாட்டு உபகரணங் களை சீரமைக்க வேண்டும்” என்றனர்.

இதுதொடர்பாக நகராட்சி ஆணையர் முருகேசனிடம் கேட்டபோது, “பூங்காவை தனியார் பராமரித்து வருகின்றனர். பூங்காவில் ஆய்வு செய்து குறைகள் சரி செய்யப்படும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in